கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஓட்டு மிஷின் வைக்க புதிய கட்டிடம் ரூ.2.92 கோடியில் கட்டப்படுகிறது

தேனி, ஆக.14: தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி), போடி, கம்பம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் ஆயிரத்து 218 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. சட்டமன்றத் தேர்தல் நடக்கும்போதும், பாராளுமன்றத் தேர்தல் நடக்கும் போதும், வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், வாக்கு எண்ணிக்கைக்கான வாக்கு எண்ணிக்கை இயந்திரங்களும் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் தேர்தல் வரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு வந்தது. தற்போது தேர்தல் ஆணையம் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை இயந்திரங்களை ஒரே இடத்தில் வைத்து பாதுகாக்க புதியகட்டிடம் கட்ட அனுமதித்துள்ளது. இதற்காக தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் அறைக்கு பின்புறம், தேனி போலீஸ் எஸ்.பி அலுவலகத்தை ஒட்டியுள்ள காலி இடத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்கும் அறை கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் 789 சதுரமீட்டர் பரப்பளவில் ரூ.2 கோடியே 91 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதியகட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று இணை தேர்தல் ஆணையரான ராஜாராம், கலெக்டர் பல்லவிபல்தேவ், பெரியகுளம் கோட்டாட்சியர் ஜெயப்ரிதா, தேனி தாசில்தார் செந்தில்குமரன், தேர்தல் தாசில்தார் ஆர்த்தி உள்ளிட்டோர் இடத்தை பார்வையிட்டனர்.

Tags :
× RELATED விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது