×

மழை பொழிவால் வரத்து குறைவு மல்லிகை கிலோ ரூ.350 ஆக அதிகரிப்பு முல்லை ரூ.280

தேனி, ஆக. 14: தேனியில் தொடர் மழை காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது. தேனி மாவட்டத்தில் சின்னமனூர், ஆண்டிபட்டி, பூமலைக்குண்டு, வயல்பட்டி, கொடுவிலார்பட்டி, சீலையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் விவசாயம் பரவலாக நடந்து வருகிறது. இதில் மல்லிகை, முல்லை, ஜாதி, சம்மங்கி, கோழிக்கொண்டை, அரளி, சாமந்தி உள்ளிட்ட பூக்கள் வகைகள் விவசாயம் நடந்து வருகிறது. இப்பகுதிகளில் விளையும் பூக்கள் தேனி பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் வரை தேனி பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ஒன்றுக்கு ரூ.200க்கும், முல்லை, ஜாதி பூக்கள் கிலோ ரூ.150 முதல் ரூ.180 வரை விற்பனையானது.

இந்த வாரம் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்தது. இதனையடுத்து பூக்கள் விளைச்சல் பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் பூ மார்க்கெட்டிற்கு வரத்து பெருமளவு பூக்கள் குறைந்து விட்டது. பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லிகை கிலோ ஒன்றுக்கு ரூ.250 முதல் ரூ.350 வரையும் தரம்வாரியாக விற்கப்படுகிறது. ஜாதி, முல்லைப்பூக்கள் கிலோ ஒன்றுக்கு ரூ.250 முதல் ரூ.280 வரை விற்கப்படுகிறது.இதுகுறித்து விவசாயி கருப்பையா கூறும்போது, கடந்த வாரம் வரை பூக்கள் விளைச்சல் அதிகம் இருந்தது. ஆனால் பூக்கள் விலை குறைவாக இருந்தது. தற்போது விலை உயர்ந்தாலும், விளைச்சல் குறைந்து விட்டதால் எங்களுக்கு விலைஉயர்ந்ததால் எந்த லாபமும் கிடைக்கவில்லை என்றார்.

Tags :
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?