மின்விளக்கு இல்லாததால் கும்மிருட்டு குடிமகன்களின் கூடாரமாக மாறிய ‘சப் வே’ காரைக்குடியில் அவலம்

காரைக்குடி, ஆக.14:  காரைக்குடி ரயில்வே ஸ்டேசன் பகுதியில் பல கோடியில் கட்டப்பட்ட சப் வேயில் விளக்குகள் அமைக்காததால் இரவு நேரங்களில் மக்கள் செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. காரைக்குடி ரயில்வே ஸ்டேசன் பகுதிக்கு அருகே லட்சுமி நகர், பொன்நகர், நவரத்தினா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆபத்தான முறையில் ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று வந்தனர். மக்களின் வசதிக்காக  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரயில்வே நிர்வாகம் சார்பில் பல கோடியில் சப் வே அமைக்கப்பட்டது. மழை பெய்தால் இந்த சப் வே முழுவதும் தண்ணீர் நிரம்பி குளம் போல் மாறிவிடும். தேங்கி கிடக்கும் தண்ணீரை அகற்ற முறையான நடவடிக்கை இதுவரை நிர்வாகம் எடுக்கவில்லை. இந்நிலையில் சப் வே பகுதியில் விளக்குகள் அமைக்காததால் இரவு நேரங்களில் மக்கள் செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ளும் குடிமகன்கள் இரவு நேரங்களில் பாராக மாற்றி வருகின்றனர். தவிர பாட்டில்களையும் அங்கேயே உடைத்து விட்டு செல்வதால் வாகனங்கள் பஞ்சர் ஆகி விடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ரயில்வே ஸ்டேசன் அருகே 100க்கும் மேற்பட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்த மக்கள் இந்த சப் வே யை தான் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இதனை கடமைக்கு என கட்டி உள்ளனர். லைட் வசதி கூட செய்யவில்லை. இதனால் மாலை 6 மணிக்கு கூட இப்பகுதியை கடக்க பயமாக உள்ளது. உள்பகுதியில் உள்ள சுவர் முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி வைத்துள்ளனர். தவிர சற்று இருட்டிய உடன் குடிமகன்கள் ஆக்கிரமித்து கொள்கின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி முடிந்து வரும் மாணவிகள் அச்சமடைகின்றனர். குடிமகன்கள் தொல்லை குறித்து ரயில்வே போலீசாரிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மக்களின் வசதிக்காக இப்பகுதியில் லை வசதி செய்ய வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED கம்ப்யூட்டர்கள் இல்லாமல் பயோமெட்ரிக்...