கொசுக்கள் தொல்லையால் அவதி

காரைக்குடி, ஆக.14:காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளிலும் பெரும்பாலான கழிவு நீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமலும், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பாட்டில்கள் அனைத்தும் கழிவு நீர் கால்வாயில் அடைத்து கொண்டும் உள்ளது. இதனால் கொசு உற்பத்தி ஆகும் இடமாக திகழ்கிறது. காரைக்குடி நகர் முழுவதும் பாதாள சாக்கடை பணிகள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது. பல வார்டுகளில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்படும் மண் அருகில் இருக்கும் கழிவு நீர் கால்வாயையும் அடைத்துக்கொள்கிறது. இதனால் அப்பகுதியில் கழிவு நீர் தேங்கி கொசு உற்பத்தி ஆகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் காய்ச்சல், உடல் வலி, வாந்தி, பேதி உட்பட பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இது குறித்து சக்திசுமன் கூறுகையில், பல மாதங்களாக இந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய் தூர்வாரப்படாமல் பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்துக்கொண்டு கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி கொசு உற்பத்தி ஆகிறது. மாலை 6 மணிக்கு மேல் கொசுக்கள் படையெடுத்து வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பதம் பார்க்கின்றது. இதனால் அடிக்கடி அவர்களின் உடல் நலன் பாதிக்கப்படுகிறது. ஆதலால் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவு நீர் சாக்கடையை சரி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Tags :
× RELATED திருப்புத்தூர் அருகே மினி மாரத்தான் ஓட்டம்