காரைக்குடி அருகே கல்லலில் மர்மமான முறையில் இறந்த முதியவர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

சிவகங்கை, ஆக. 14:  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் தமிழர் தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு(56). இவர் நேற்று முன்தினம் கல்லலில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் மணிமுத்தாறு ஆற்றுப்பாலம் அடியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரின் கழுத்து மற்றும் கண்ணில் காயங்கள் இருந்தன. உடலை கைப்பற்றிய கல்லல் போலீசார் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று திருநாவுக்கரசு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் கொலை வழக்கு பதிவு செய்யாமல் போலீசார் மறைப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்து அவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர்.

கொலை வழக்கு மற்றும் வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய வேண்டும். மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் வீரபாண்டி, நிர்வாகிகள் கருப்புச்சாமி, மதி, இ.கம்யூனிஸ்ட் ஒக்றிய செயலாளர் சந்திரன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர்கள் சங்குஉதயக்குமார், திருமொழி மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மானாமதுரை சாலையில் சுமார் 40 நிமிடம் மறியலில் ஈடுபட்ட அவர்களிடம் ஏஎஸ்பி மங்களேஸ்வரன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர் இதே கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர், எஸ்பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து உடலை பெற மறுத்து வருவதால் பதற்றம் நீடிக்கிறது.

Tags :
× RELATED கம்ப்யூட்டர்கள் இல்லாமல் பயோமெட்ரிக்...