×

குண்டும், குழியுமாக உள்ளது பையூர் ரோட்டை சீரமைக்க வேண்டும் கிராமமக்கள் வலியுறுத்தல்

திருப்புத்தூர், ஆக.14:  திருப்புத்தூர் அருகே கண்டவராயன்பட்டி-பையூர் வழியாக எஸ்.வேலங்குடி செல்லும் ரோட்டை சீரமைக்க வேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புத்தூர் அருகே கண்டவராயன்பட்டி, பையூர் வழியாக எஸ்.வேலங்குடி ரோடு சுமார் 7 கி.மீ தூரம் உள்ளது. இந்த ரோட்டை பூலாங்குறிச்சி, செவ்வூர், ஆத்திரம்பட்டி, மின்னல்குடி, சுண்டக்காடு, நட்டாணிவயல், கணக்கன்பட்டி, மலம்பட்டி, எஸ்.வேலங்குடி உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அனைத்து விதமான வேலைகளுக்கும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் தினந்தோறும் 5 டவுன் பஸ்கள் திருப்புத்தூர் மற்றும் பொன்னமராவதி டெப்போக்களில் இருந்து வந்து செல்கிறது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சைக்கிள், டூவீலர்களில் சென்று வருகின்றனர்.

சுமார் 6 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இந்த ரோடு தற்போது முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக கற்கள் பெயர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இப்பகுதி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டு தினந்தோறும் வந்து செல்கின்றனர். வெளியூர்களுக்கு வேலைக்குச்சென்றுவிட்டு இரவு நேரத்தில் சைக்கிள் மற்றும் டூவீலர்களில் வருபவர்கள் வெளிச்சம் இல்லாததால் இருட்டில் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே இந்த ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கிராமங்களை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து எஸ்.வேலங்குடி கிராமத்தைச் சேர்ந்த வக்கீல் நாகூர்கனி கூறுகையில், நான் தினந்தோறும் வேலங்குடியில் இருந்து திருப்புத்தூர் நீதிமன்றத்திற்கு பணிக்காக டூவீலரில்தான் சென்று வருகிறேன். இந்த ரோடு தற்போது முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.  இதுவரைக்கும் எந்த விதமான பராமரிப்பு பணியும் செய்யவில்லை. இப்பகுதிகளை சேர்ந்த எஸ்.வேலங்குடி, சுண்டக்காடு, கணக்கன்பட்டி, துவார், மின்னல்குடி உள்ளிட்ட பல கிராமத்தினர் அனைவரும் இந்த ரோட்டில் தான் செல்லவேண்டும். இதனால் இப்பகுதியினர் மிகவும் சிரமப்பட்டு தினந்தோறும் சென்று வருகின்றனர். இந்த ரோடு சுமார் 6 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே ரோட்டை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED உலக புத்தக தின விழா