×

பெருமாள்கோவில் பள்ளியில் குடிநீர்,கழிப்பறை வசதியில்லாமல் அவதிப்படும் மாணவ,மாணவிகள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பரமக்குடி, ஆக.14:  அரசு உயர்நிலை பள்ளியில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை இல்லாததால் மாணவ,மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பரமக்குடி அருகே உள்ள ெபருமாள்கோவில் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த கிராமத்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நிதிஉதவி செய்து நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தியுள்ளனர். அரசு போதுமான நிதிஉதவி கொடுக்காததால் இளைஞர்கள், ஆழ்துளை கிணறு அமைத்து கொடுத்தனர். இதனால் பயன்பாட்டிற்கு தண்ணீர் இருந்தது. கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சியால் தண்ணீர் இல்லாமல் பயன்பாடியின்றி உள்ளது. மாணவ,மாணவிகளுக்கு போதுமான கழிப்பறை வசதி இல்லாமல் உள்ளது. இருக்கும் கழிப்பறைகளில் தண்ணீர் இல்லாததால் மாணவிகள் பள்ளி அருகில் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று வருகின்றனர், கழிப்பறை வசதிகள் இல்லாமல் அங்கு பணியாற்றும் பெண் ஆசிரியைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாணவர்கள் ஒதுங்குபுறமான இடங்களை தேடி அலைந்து வருகின்றனர்.
பள்ளியில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் டேங்கு சேதமடைந்து பயன்பாடு இன்றி உள்ளதால், சாப்பிட பாத்திரம் மற்றும் கை கழுவ முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிக்க குடிநீர் இல்லாமல் வீட்டிலிருந்து கொண்டு வரும் தண்ணீரை குடித்து தாகம் தீர்க்கின்றனர். சிலர் தண்ணீர் குடிக்காமலே மாலை வீட்டிற்கு சென்று தாகம் தீர்க்கும் கொடுமை தொடர்ந்து வருகிறது.

சில சமயங்களில் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் தங்களது சொந்த பணத்தை கொண்டு குடிநீர் வாங்கி கொடுத்தாலும் மாதம் முழுவதும் வாங்கி கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் இல்லாததால் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையும், இரவு நேரங்களில் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் மது குடிக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக பலமுறை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினருக்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாணவர்கள் போராட்டத்திற்கு தயாராகும் நிலை உருவாகியுள்ளதால் குடிநீர்,கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் வலியுறுத்தியுள்ளனர்.

பெற்றோர் தரப்பில் கூறுகையில், இந்த பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கிராமத்தினர் சார்பாக உதவி செய்தோம். அதன்பின் பள்ளி தேவைக்காக போர்வெல் போட்டு கொடுக்கப்பட்டது. பள்ளிக்கு தடவாள பொருள்கள் வாங்கி கொடுத்தோம். கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து கல்வி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மாணவ,மாணவிகளின் நலன் கருதி கழிப்பறை, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. உடனடியாக மாணவ,மாணவி மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான அடிப்படை வசிகளை செய்து கொடுக்கவேண்டும். இல்லையொனில் மாணவ மாணவிகள் கொண்டு போராட்டம் நடைபெறும் என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை