விதைகளை தாக்கும் தேன் ஒழுகல் நோய்

ராமநாதபுரம், ஆக.14:  தேன் ஒழுகல் நோய் பாதித்த விதைகளை நீக்க வேளாண்துறை சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இறவையில் கம்பு பயிரிடுவதற்கு கோ-7, கோ (சியு) 9, ஐசிஎம்வி-221, ராஜ்-171, எக்ஸ்-7 ஆகியவை ஏற்ற ரகங்கள் ஆகும். எக்டேருக்கு 3.75 கிலோ விதை இட வேண்டும். எக்டேருக்கு 7.5 சென்டில் நாற்றாங்கால் அமைக்க வேண்டும். 3*1.5 மீ அளவு கொண்ட 6 படுக்கைகளை 1 சென்டில் அமைத்து அரை மீட்டர் கால்வாய் அரை அடி ஆழத்தில் ஒவ்வொருபடுக்கையை சுற்றியும் அமைக்க வேண்டும். எக்டேருக்கு 750 கிலோ தொழுஉரம் இட வேண்டும். தேன் ஒழுகல் நோய் பாதித்த விதைகளை நீக்க 10 லிட்டர் நீரில் 1 கிலோ உப்பினை கரைத்து விதைகளை அதில் கொட்டி மிதக்கும் விதைகளை நீக்கி, நல்ல தண்ணீர் கொண்டு 3 அல்லது 4 முறை கழுவி நிழலில் உலர்த்த வேண்டும்.

தண்டு ஈ மற்றும் தண்டு துளைப்பான் நோய் பாதிப்பை தடுக்க வேளாண் அதிகாரிகளை ஆலோசித்து விதை முலாம் பூச வேண்டும். அடிச்சாம்பால் நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்க மெட்டலாக்சில் 6 கிராமுடன், 5 மில்லி தண்ணீர் சேர்த்து, 1 கிலோ விதையுடன் கலக்க வேண்டும். 600 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவுடன் 1 எக்டேருக்கு உண்டான விதையை கலந்து உயிர்உரமாக விதைக்க வேண்டும். விரல்களால் 1 சென்டி மீட்டர் ஆழத்திற்கு கோடுகள் இட்டு, ஒரு படுகைக்கு அரை கிலோ விதையினை தூவி மண்ணில் மூடவேண்டும். மிதைல் பாரதியான் மருந்தினை விதைத்தவுடன் தூவி எறும்புகளில் இருந்து பாதுகாக்கலாம். இதுதொடர்பான கூடுதலான விபரங்களுக்கு அந்தந்த பகுதி வேளாண் அலுவலரையோ, வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அணுகலாமென வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED நலத்திட்ட உதவிகள்