மேலூர் நாகம்மாள் கோயிலில் ஆடித்திருவிழா கோலாகலம் ஆயிரக்கணக்கானோர் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

மேலூர், ஆக. 14:  மேலூர் நாகம்மாள் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்தும், பக்தர்கள் பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மதுரை மாவட்டம், மேலூர் திருவாதவூர் ரோட்டில் நாகம்மாள் கோயில் உள்ளது. இங்கு ஆடித்திருவிழா 15 நாட்களுக்கு முன் தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் விரதம் இருந்தனர். திருவிழாவையொட்டி நேற்று காலை மண்கட்டி தெப்பக்குளம் முதல் நகைக்கடை தெரு வரை சாலையின் இருபுறமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அமர்ந்து சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் பால்க்குடம் எடுத்து பெரிய கடை வீதி, திருச்சி ரோடு, செக்கடி வழியாக கோயிலை அடைந்தனர்.

தொடர்ந்து பக்தர்கள் 5 அடி முதல் 30 அடி நீளமுள்ள அலகு குத்தி ஊர்வலமாக சென்றனர். ஒரே அலகை 2க்கும் மேற்பட்ட பக்தர்கள் குத்தியும், பறவை காவடி எடுத்தும் ஊர்வலமாக சென்றனர். திருநங்கைகளும் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு பல்லாயிரம் லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நிறைவாக இன்று முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது.

Related Stories: