மண்ணால் அமைக்கும் சர்வீஸ் சாலைகள் சரியில்லை வாகன ஓட்டிகள் புகார்

திருமங்கலம், ஆக. 14: திருமங்கலத்திலிருந்து சேடபட்டி வரை 24 கி.மீ தூரத்திற்கு சாலை பராமரிப்பு பணி மூன்று மாதமாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக சேடபட்டியிலிருந்து கிழவனேரி வரையிலும், இரண்டாம் கட்டமாக கிழவனேரியிலிருந்து திருமங்கலம் வரையிலும் பணிகள் நடக்கின்றன. இதில், திருமங்கலம் ஆலம்பட்டியிலிருந்து கிழவனேரி வரையிலான 7 கி.மீ தூரத்திற்கு 9 சிறுபாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சிஆர்ஐடி திட்டத்தின் கீ்ழ் 130 லட்சத்தில் பணிகள் நடந்து வருகின்றன. இதில், நடுவக்கோட்டையிலிருந்து ஆலம்பட்டி வரையில் கட்டப்பட்டு வரும் சிறுபாலங்களுக்கான சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சர்வீஸ் ரோடுகளை முறையாக அமைக்காமல் மண்ணால், அமைத்துள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக மழை காலங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இது குறித்து கிழவனேரி, சவுடார்பட்டி வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘பாலப் பணிகளுக்காக நெடுஞ்சாலை மூடப்பட்டு, அதன் அருகே சர்வீஸ் ரோடு அமைத்துள்ளனர். இதில் ஜல்லிகற்கள் போடாமல் மண்ணை நிரப்பி ரோடு போட்டுள்ளனர். சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சர்வீஸ் சாலைகளை பயன்படுத்துகின்றனர். வாகனங்களின் சக்கரங்கள் மண்ணில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. மழை காலங்களில் சர்வீஸ் சாலைகள் சேறும், சகதியுமாக மாறுகிறது. எனவே, பாலம் கட்டும் பணி முடியும் வரை சர்வீஸ் சாலைகளை தரமாக அமைக்க வேண்டும்’ என்றனர்.

Tags :
× RELATED மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தவருக்கு வெட்டு