கண்மாய், ஊருணிகளில் ரூ.31 கோடியில் தூர்வாரும் பணி அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தகவல்

மதுரை, ஆக. 14: மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குட்லாடம்பட்டி, நாகர்குளம் கண்மாய், மேக்கிழார்பட்டி ஊருணியில், தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர்மேலாண்மை இயக்கம் சார்பில் குடிமராமத்து பணி நேற்று தொடங்கியது. மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அம்ரித் தலைமை வகித்தார். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: மதுரை மாவட்டத்தில் 318 சிறுபாசன கண்மாய்கள், 1576 ஊருணிகள் மற்றும் குளங்களை குடிமராமத்து திட்டம் மூலம் ரூ.31 கோடியில் தூர்வாரும் பணியும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டம் மூலம், கட்டுமானப்பணிகளையும் 10 சதவீதம் மக்கள் பங்களிப்புடன் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.  

குட்லாடம்பட்டி ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் கண்மாய் மற்றும் 4 ஊரணிகள் மேம்பாடு செய்யப்பட உள்ளது. நாகர்குளம் கண்மாயில் ரூ.5 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணியும், ரூ.1.5 லட்சம் மதிப்பில் மடைகள் மராமத்துப் பணியும் செய்யப்படவுள்ளது. உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில், சிறுபாசன கண்மாய், 77 ஊரணிகள் சீரமைக்கப்படவுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: