போதிய பஸ் வசதியில்லாததால் ஆனையூர், கூடல்நகர் மக்கள் அவதி ஆட்டோக்களில் கட்டண உயர்வு மினி பஸ்களை இயக்க கோரிக்கை

மதுரை, ஆக. 14: மதுரையில் இருந்து ஆனையூர், கூடல்நகர் பகுதிக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தற்போது ஆட்டோக்களின் கட்டண உயர்வால், மினி பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை ஆனையூர், கூடல்நகர் மற்றும் விளாங்குடி பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. இப்பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தினசரி தங்களது தேவைக்காக மதுரை நகருக்குள் வந்து செல்கின்றனர். ஆனால், போதிய பஸ் போக்குவரத்து இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஆனையூர், கூடல்நகர் பகுதிகளிலிருந்து பெரியார், ஆரப்பாளையம் மற்றும் மாட்டுத்தாவணி பஸ்நிலையங்கள், அரசு மருத்துவமனை, சிம்மக்கல், கலெக்டர் அலுவலகம் செல்ல பஸ் வசதியில்லை. மாறாக இப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான டீசல் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆட்டோக்களில் ஆடு, மாடுகளைப் போல பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். அசுர வேகத்தில் செல்லும் ஆட்டோக்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இருப்பினும் வேறு வழியின்றி பொதுமக்கள் ஆட்டோவில் பயணம் செய்கின்றனர்.

Advertising
Advertising

இந்த ஆட்டோக்களில் ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்தக் கட்டணத்தை ரூ.20 ஆக உயர்த்திவிட்டனர். அதுவும் குறிப்பிட்ட தூரம் மட்டும்தான். ஆனையூரிலிருந்து ஒருவர் கோரிப்பாளையம் வரவேண்டும் என்றால், ஆனையூரிலிருந்து ஆலமரம் ஸ்டாப்புக்கும், ஆலமரத்திலிருந்து, கோரிப்பாளையத்திற்கும் என தனித்தனியாக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே, ஆனையூர் மற்றும் கூடல்நகர் பகுதி பொதுமக்களின் நலனை கருதி, இப்பகுதியில் கூடுதல் டவுன் பஸ்களை இயக்க வேண்டும், அல்லது மினி பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை  எழுந்துள்ளது.

 சமூக ஆர்வலரும், ஓட்டுனருமான சோமசுந்தரம் கூறுகையில், `ஆனையூர் மற்றும் கூடல்நகர் பகுதியில் இருந்து பொதுமக்கள் மருத்துவமனை, அண்ணா பஸ்நிலையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்ல, மினி பஸ்களை இயக்க வேண்டும். ஆனையூரிலிருந்து, கூடல்நகர், செல்லூர், அரசு மருத்துவமனை, அண்ணா பஸ்நிலையம், வக்போர்டு கல்லூரி வழியாக மாட்டுத்தாவணிக்கும், கூடல்நகரிலிருந்து செல்லூர், கோரிப்பாளையம், சிம்மக்கல் வழியாக பெரியார் பஸ் நிலையத்திற்கும், ஆனையூர் கூடல்நகர் பகுதியிலிருந்து செல்லூர், கோரிப்பாளையம், தல்லாகுளம் வழியாக மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கும் மினி பஸ்களை இயக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: