பேரையூர் அருகே சாய்ந்த நிலையில் ஆதிதிராவிடர் காலனியில் அச்சுறுத்தும் டிரான்ஸ்பார்மர் சீரமைக்க பணம் கேட்பதாக குற்றச்சாட்டு

பேரையூர், ஆக. 14: பேரையூர் அருகே, ஆதிதிராவிடர் காலனியில் சாய்ந்த நிலையில், அச்சுறுத்தும் டிரான்ஸ்பார்மரை சீரமைக்க, மின்வாரிய ஊழியர்கள் பணம் கேட்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பேரையூர் அருகே, டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் பெரியபூலாம்பட்டி ஊராட்சியில் குருவப்பநாயக்கன்பட்டி உள்ளது. இந்த ஊரில் ஆதிதிராவிடர் காலனிக்கு மின்விநியோகம் செய்யும் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் சாய்ந்த நிலையில் எப்போதும் கீழே விழும் நிலையில் உள்ளது. அருகில் உள்ள  வெள்ளாங்கிடங்கு ஊருணி அருகில் உள்ள மின்வயர் இழுவையில் நிற்கிறது. மழைக்காலங்களில் ஊரிலிருந்து வெளியேறு உபரிநீர் மற்றும் மழைநீர் இந்த  ஊருணியில் தேங்குகிறது. இதனால், பொதுமக்கள் உயிர் அச்சத்தில் உள்ளனர். இதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்க, மின்வாரிய ஊழியர்கள் ரூ.5 ஆயிரம் கேட்டதாக புகார் கூறுகின்றனர். மேலும், இது குறித்து பலமுறை பேரையூர் துணைமின்நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

Advertising
Advertising

இதுதவிர காலனியில் உள்ள 3 மின்கம்பங்களில், சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெறிகின்றன. இந்த மின்கம்பங்கள் காற்று, மழைக்காலங்களில் கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே, குருவப்பநாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் உள்ள டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து காலனியைச் சேர்ந்த குப்பன் என்பவர் கூறுகையில், ‘சேதமடைந்த மின்கம்பங்கள், சாய்ந்த டிரான்ஸ்பார்மர் ஆகியவை குறித்து காலனி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மழை, காற்று காலங்களில் டிரான்ஸ்பார்மர் இருக்கும் பகுதிக்கு செல்ல அச்சமாக உள்ளது. பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் அதன் வழியாகத்தான் சென்று வருகின்றனர். இதனால், பெற்றோர்கள் அச்சமாக இருக்க வேண்டியுள்ளது. பாண்டிச்செல்வி என்பவர் கூறுகையில், ‘சாய்ந்த டிரான்ஸ்பார்மரையும், மின்கம்பங்களை சீரமைக்க பலமுறை, மின்வாரிய அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை இல்லை. டிரான்ஸ்பார்மர் சாய்ந்து மின்வயர் அறுந்து விழுந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே, வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன், மின்கம்பங்களையும், டிரான்ஸ்பார்மரையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: