×

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிக்கும் காவிரி குடிநீர்

திண்டுக்கல், ஆக. 14: திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிக்கும் காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.பெரியசாமி எம்எல்ஏ கலெக்டரிடம் மனு அளித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை தீர்க்கவும், அனைத்து பகுதிகளுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க கோரி திமுக மாநில துணை பொதுச் செயலாளரும், ஆத்தூர் எம்எல்வுமான ஐ.பெரியசாமி, ஒட்டன்சத்திரம் எம்எல்ஏ அர.சக்கரபாணி, திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி ஆகியோர் நேற்று கலெக்டர் விஜயலட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் கலெக்டரை சந்தித்து  ஐ.பெரியசாமி கூறியதாவது, ‘காவிரி கூட்டுக்குடிநீர் மாவட்டம் முழுவதும் முழுமையாக கிடைக்க கோரி அமைச்சர் சீனிவாசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பழைய கலெக்டர் முன்பு கடந்த ஜூலை 27ம் தேதி வலியுறுத்தினோம். ஆனால் அவர் நிறைவேற்றுவதற்கு முன்பு மாறுதலாகி சென்று விட்டார். ஆத்தூர் தொகுதி முழுவதும் குறிப்பாக ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள  சுமார் 200 கிராமங்களில் ஒரு சதவீதம் கூட தண்ணீர் கிடைக்காமல் உள்ளது. ஆனால் தகவல் உரிமை சட்டத்தில் கிராமங்களில் தண்ணீர் கிடைப்பதாக தகவல் வருகிறது. எனவே வேடசந்தூர் பகுதியில் வீணாக கலக்கும் நீரை ஆத்தூர் பக்கம் திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

அர.சக்கரபாணி கூறியதாவது, ‘ஒட்டன்சத்திரம் பகுதி முழுவதுமே குடிநீர் பஞ்சத்தில் தத்தளிக்கிறது. பல கிராமங்களில் தண்ணீரின்றி மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். குறிப்பாக எல்லைப்பட்டி, ஜோதிப்பட்டி உள்பட பல இடங்களில் ஆடு, மாடுகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் விலைக்கு வாங்குகின்றனர். ஒட்டன்சத்திரம் நகரில் ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீர் இல்லை. இதனால் ஒரு குடம் தண்ணீர் ரூ.15 முதல் ரூ.20க்கு விலை கொடுத்து வாங்குகின்றனர். 34 ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கடந்த 2008ல் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதில் திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் என 3 பேக்கேஜ்ஜாக பிரிக்கப்பட்டது. ஆனால் தற்போது 3வது  பேக்கேஜ்
திட்டமான ஒட்டன்சத்திரம் பகுதிக்கு குடிநீர் எங்குமே செல்வில்லை. எனவே அதிகாரிகள் கிடைக்கும் நீரை ஒரு பக்கமாக அனுப்பாமல் எங்கள் பகுதி மக்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும்’ என்றார்.

வேலுச்சாமி கூறியதாவது, ‘திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை, பாலகிருஷ்ணாபுரம் பாலம் குறித்து மக்களவையில் பேசினேன். இதில் பாலப்பணிக்கு அதிகாரிகள், ‘மத்திய அரசு பணி முடிந்து விட்டது, மாநில அரசுதான் பணிகளை செய்ய வேண்டும்’ என கூறினர். மாவட்ட நிர்வாகம் பால பணிகளை விரைவில் முடித்து பாலகிருஷ்ணாபுரம் உள்பட 120 கிராமமக்களின் துயர் துடைக்க வேண்டும்’ என்றார். கலெக்டர் விஜயலட்சுமி கூறியதாவது, ‘திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். பாலகிருஷ்ணாபுரம் பாலம் கட்டுவதற்கு ரூ.2 கோடியே 30 லட்சம் வந்துள்ளது. நானும் கலெக்டர்கள் கூட்டத்தில் பேசியுள்ளேன். ஒரு வாரத்தில் அரசாணை வந்து விடும். நிலத்தின் உரிமையாளர்களுக்கு பணத்தை வழங்கி விட்டு விரைவில் பணிகள் துவக்கப்படும்’ என்றார். இதில் ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் வெள்ளைச்சாமி, திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் செழியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED பழநியில் திமுக கூட்டணியினரின் தேர்தல் பணிகளை எம்எல்ஏ ஆய்வு