கொடைக்கானலில் பயன்பாட்டிற்கு வராத படகு இல்ல பாத்ரூம்

கொடைக்கானல், ஆக. 14: கொடைக்கானலில் சுற்றுலா வளர்ச்சி கழக படகு இல்ல கழிப்பறை பயன்பாட்டிற்கு வராததால் சுற்றுலா பயணிகள் சிரமமடைந்து வருகின்றனர். மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சீசன் நேரங்களில் லட்சக்கணக்கானோர் வருகை புரிகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் நகரின் மத்தியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியை காண தவறுவதில்லை. ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலையில் குதிரை சவாரி, நடைபயிற்சி, சைக்கிள் மற்றும் டூவீலர் ரைய்டிங் சென்று உற்சாகமடைவர். இதை கருத்தில் கொண்டு சுற்றுலா வளர்ச்சி கழக படகு இல்லத்தில் நவீன கழிப்பறை ஒன்று பல மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. பல லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்த கழிப்பறை தற்போது வரை செயல்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ‘அவசரத்திற்கு’ செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தவிர கழிப்பறைக்கான தொட்டி போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. எனவே சுற்றுலா வளர்ச்சி கழகம் இந்த தொட்டியை மாற்றியமைப்பதுடன், கழிப்பறையையும் உடனே திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: