×

கோயில் பணியிடங்களை நிரப்ப தனி தேர்வாணையம்

பழநி, ஆக. 14: கோயில் பணியிடங்களை நிரப்ப தனி தேர்வாணையம் அமைக்க வேண்டுமென மக்கள் எழுச்சி பேரவை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வருக்கு மக்கள் எழுச்சி நிறுவனர் நாகுஜி அனுப்பி உள்ள கோரிக்கை மனு:     தமிழகத்தில் அதிக பணம் செலவழிக்கப்படும் பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிப்படாத கோயில்களின் வரவு- செலவு மற்றும் இதர விபரங்களை கோயில் இணையதளங்களில் வெளியிட வேண்டும். கோயில் செயல்பாடுகளை, கோயிலின் இணையதளங்களில் உடனுக்குடன் வெளியிட வேண்டும். கோயில்களில் உள்ள ஓதுவார், சிவவாத்தியங்கள் வாசிப்போரின் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாநிலம் முழுவதும் கோயில்களுக்கு சொந்தமாக 4.75 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான நிலங்கள் கோயில் அலுவலர்களுக்கே தெரிவதில்லை. இவை யாவும் அந்நியர்களின் ஆக்கிரமிப்புகளில் அகப்பட்டு உள்ளன.

இந்நிலங்களை கட்டுப்பாட்டில் எடுக்க நிலஅளவை, வருவாய்த்துறை மற்றும் இந்து சமயஅறநிலையத்துறை இணைந்த குழு அமைத்து நிலங்களை அடையாளப்படுத்தி சொத்து பதிவேடுகளை புதுப்பிக்க வேண்டும். திருக்கோயில் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 78 மற்றும் 79ன் படி மண்டல இணைஆணையர்களுக்கு  நில மீட்பு தொடர்பான உச்சபட்ச அதிகாரம் உள்ளது. ஆனால், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பான வழக்குகளில் தீர்வு செய்யாத இணை ஆணையர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக கோயில் நிலங்களில் சுமார் 1 லட்சம் ஏக்கர் புறம்போக்காக உள்ளது. இங்கு பலர் அத்துமீறி குடியிருந்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் பட்டா வாங்கி விட்டனர். இந்நிலங்களை மாநில அரசின் நில நிர்வாக ஆணையரால் ஆய்வு செய்து, பட்டாக்களை ரத்து செய்து, கோயிலின் பெயரில் பட்டா வழங்க வேண்டும். திருக்கோயில் பணியிடங்களை நிரப்ப தனி தேர்வாணையம் அமைக்க வேண்டும். நிலங்களுக்கு மீட்பதற்காக கூடுதலாக 5 மாவட்ட வருவாய் அலுவலர்கள் நியமிக்க வேண்டும். தமிழகத்தில் 1.28 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் வழக்கில் சிக்கி உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை வழக்குகளை, சிவில் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டியதில்லை. இது சட்ட முரணாணது. தமிழக அரசும், உச்ச நீதிமன்றமும் இணைந்து இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags :
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...