திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு மாதத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 5000 பேருக்கு அபராதம் விதிப்பு

திண்டுக்கல், ஆக. 14: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்ற 5 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். சாலை விபத்துகளில் 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாததால் இறக்கின்றனர். இதனால் டூவீலரை ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால் மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாததால் பலரும் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்குகின்றனர். உடலில் காயங்கள் பட்டால் காப்பாற்றி விடலாம். ஆனால் தலை காயமடைந்தால் மூளைசாவு ஏற்பட்டு மரணிக்க நேரிடுகிறது. இதை தடுக்கவே போலீசார் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என வற்புறுத்தி அபராதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்ற அரசு அலுவலர்கள் உள்பட 5 பேருக்கு தலா ரூ.100 முதல் ரூ.300 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சீட் பெல்ட் அணியாமல் கார்களை ஓட்டி சென்றவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தியாகாமல் டூவீலர்களை ஓட்டி சென்றவர்களின் பெற்றோர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரவில் குடிபோதையில் வாகனம் ஓட்டி சென்ற வாகனங்களின் பதிவு சான்றிதழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போக்குவரத்து ஆய்வாளர் பிரகாஷ்குமார் கூறியதாவது, ‘தற்போது வரைக்கும் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு குறைந்த கட்டணம் வசூலித்து வருகிறோம். மதுரை ஐகோர்ட் கிளை ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூ.ஆயிரம் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டணம் விரைவில் அமலுக்கு வர உள்ளது. இ.பில் சிஸ்டத்தில் அபராதம் வந்தால், யாரும் தப்பிக்க முடியாது. இதனால் டூவீலர்கள் பயன்படுத்துபவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களையும் பிடிக்க ஆங்காங்கு கண்காணிக்கப்படுகிறது. ஒரு வழிப்பாதையில் வருபவர்களை கேமரா மூலம் கண்காணித்து, வாகன எண்களை வைத்து பிடிக்க திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.

Related Stories: