திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு அக்கரைப்பட்டியில் ‘அக்கறையில்லை’

செம்பட்டி, ஆக. 14: அக்கரைபட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடங்கி கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆத்தூர் ஒன்றியம், அக்கரைப்பட்டி ஊராட்சியில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு திடக்கழிவு மேலாண்மை இயக்கம் செயல்படவில்லை என்றே சொல்லலாம். அந்தளவிற்கு குடியிருப்புகள், தெருக்கள், சாலையோரம் என திரும்பிய பக்கமெல்லாம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் உரக்கிடங்கிற்கு எடுத்து செல்லாமல் மாறாக மேற்கண்ட இடங்களில் கொட்டி குவித்து வருகின்றன. இதனால் இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தவிர குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகி பொதுமக்கள் சுவாச பிரச்னைகளுக்கும் ஆளாக வேண்டிய அவலம் உள்ளது.

Advertising
Advertising

மேலும் குடகனாற்றின் நீர்வரத்து பாதையிலும் குப்பைகளை கொட்டி குவித்து வருகின்றனர். மத்திய அரசு ஜல்சக்தி நீர்மேலாண்மை இயக்கம் மூலம் கிராமம், கிராமமாக சென்று மழைநீரை சேகரிக்க வேண்டும், மரம் வளர்க்க வேண்டும் என பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இங்கு ஊராட்சி நிர்வாகமே மழைநீர் வரும் பாதையை மறைத்து குப்பை கழிவுகளை கொட்டி வருவது விவசாயிகளிடையே வருத்தமடைய செய்துள்ளது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘எதை செய்யனும், எதை செய்யக்கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டிய ஊராட்சி நிர்வாகமே அதையெல்லாம் இங்கு செய்கிறது. குப்பைகளை உரக்கிடங்கிற்கு அனுப்பாமல் திறந்தவெளியில் கொட்டி எரிக்கின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பல்வேறு நோய்கள் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. குடகனாற்றில் நீர்வரத்து பாதையில் குப்பைகளை மலைபோல் கொட்டி மழைநீர் வருவதை தடுத்துள்ளனர். மேலும் இதனால் மண்வளம் பாதிக்கப்படுவதுடன் நிலத்தடி நீரும் மாசடைகிறது. எனவே மாவட்ட திட்ட இயக்குனர் அக்கரைப்பட்டி ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: