தாண்டிக்குடி அருகே பிஎஸ்என்எல் சேவை துண்டிப்பால் பத்து கிராம மக்கள் பரிதவிப்பு

பட்டிவீரன்பட்டி, ஆக. 14: தாண்டிக்குடி அருகே பிஎஸ்என்எல் செல்போன் சேவை பாதிப்பால் 10க்கும் மேற்பட்ட மலை கிராமமக்கள் தகவல் தொடர்பின்றி கடும் அவதியடைந்து வருகின்றனர். தாண்டிக்குடி அருகே பெரும்பாறை, கொங்கபட்டி, மஞ்சள்பிறப்பு, புல்லாவெளி போன்ற மலை கிராமமக்களின் தகவல் தொடர்புக்காக பிஎஸ்என்எல் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள், தகவல் தொடர்புக்கு பெரும்பாறையில் உள்ள பிஎஸ்என்எல் டவர் லைனை மட்டுமே நம்பியுள்ளனர். காரணம், மற்ற தனியார் நிறுவன செல்போன் சேவைகள் எதுவும் இங்கு கிடையாததுதான். இதற்காக பட்டிவீரன்பட்டியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்திலிருந்து தரைவழியாக கேபிள் பதிக்கப்பட்டு மலைச்சாலையின் ஓரத்தில் பூமிக்கடியில் பதிக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றது. கடந்தாண்டுதான் புதிய கேபிள் வயர் அமைக்கப்பட்டது.

Advertising
Advertising

இந்நிலையில் தற்போது சித்தரேவு- பெரும்பாறை இடையே புதிதாக சாலை அமைக்க தடுப்புச்சுவர் கட்டும் பணி 10க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்து வருகின்றது. இதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் சாலை ஓரத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது பிஎஸ்என்எல் வயர் துண்டிக்கப்பட்டது. இதன்காரணமாக மலை கிராமமக்கள் தகவல் தொடர்பு வசதியின்றி கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘மலை கிராமங்களுக்கு காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்க தினமும் வியாபாரிகள் வருகின்றனர். செல்போன் சேவை பாதிப்பால் விலை நிலவரங்களை கூட அறிய முடியாமல் அவதியடைந்து வருகிறார்கள். மேலும் பெரும்பாறை தபால்நிலையம், மேல்நிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி, சுகாதாரநிலையம், ஊராட்சி அலுவலகம் போன்றவற்றில் அரசு சம்பந்தமாக பணிகள் பாதிப்படைந்துள்ளன. எனவே அதிகாரிகள் விரைந்து தகவல் தொடர்பை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

வயரில்லா சேவை உடனே தேவை

பிஎஸ்என்எல் கேபிள் வயர் துண்டிப்பை சரிசெய்ய இன்னும் அதிகாரிகள் வரவில்லை என கூறப்படுகிறது. இனி அவர்கள் வந்து சரிசெய்ய வேண்டுமானால் ஒரு நாளை தாண்டி விடும். ஏற்கனவே மலை கிராமமக்கள் தகவல் தொடர்பின்றி 2 நாட்களாக தவித்து வருகின்றனர். எனவே வயரில்லா சேவையாக கேபிளின்றி சேட்லைட் மூலம் இணைப்பு வழங்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: