பழநி சண்முகாநதி பால சீரமைப்பால் தினம், தினம் சிரமம்

பழநி, ஆக. 14: பழநி சண்முகாநதி பாலத்தில் நடக்கும் சீரமைப்பு பணியால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.  பழநியில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ளது சண்முகாநதி ஆறு. இந்த ஆற்றைக் கடந்துதான் உடுமலை, பொள்ளாச்சி, கோவை போன்ற ஊர்களுக்கு செல்ல வேண்டும். இந்த ஆற்றின் குறுக்கே கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. தற்போது இந்த பாலத்தின் கைபிடிப்பு சுவர்கள் இடிந்து விழுந்தும், வாகனங்கள் செல்லும்போது அளவுக்கதிமாக அதிர்வடைந்தும் வந்தது. இதனால் பாலத்தை சீரமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனடிப்படையில் ரூ.4.99 கோடி மதிப்பீட்டில் 5 தூண்கள் கொண்ட இந்த பாலத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி காரணமாக கடந்த ஆக.5ம் தேதி முதல் 20 நாட்களுக்கு பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்களில் பழநியில் இருந்து கோவை, பொள்ளாச்சி, உடுமலை செல்லும் வாகனங்கள் பழைய தாராபுரம் சாலை, மானூர், பெத்தநாயக்கன்பட்டி, சின்னக்கலையம்புத்தூர் வழியாக இயக்கப்படுகிறது. கோவை, பொள்ளாச்சி, உடுமலை ஆகிய ஊர்களில் இருந்து பழநி வரும் வாகனங்கள் தாழையூத்து, மானூர், பழைய தாராபுரம் சாலை வழியாக இயக்கப்பட்டு வருகிறது.

சீரமைப்பு நடைபெறும் பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஆனால், சண்முகநதி அருகே உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி வாகனம் மாணவர்களை ஏற்றி கொண்டு இப்பாலத்திலேயே செல்கின்றன. இதனால் காலை, மாலை நேரங்களில் இப்பாலத்தின் இருபுறமும் டூவீலர்கள் தேங்கி நின்று, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலின்போது பள்ளி வாகன டிரைவருடன், பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பள்ளி வாகனங்கள் மாணவர்களை நடுவழியில் கீழே இறக்கிவிட்டுவிட்டு திரும்பி சென்றன. இதனால் மாணவர்கள் சுமார் 1 கிமீ நடந்து சென்று பள்ளியை அடைந்தனர். இதுபோன்ற அவஸ்தைகளை குறைக்க பாலத்தின் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: