நடுரோட்டில் உலா வந்து அட்டகாசம் மாவட்டத்தில் நாய் தொல்லை அதிகரிப்பு

ஆத்தூர், ஆக.14:  சேலம் மாவட்டத்தில் நாய் தொல்லை அதிகரித்துள்ளதால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சேலம் மாவட்டத்தில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருமுனையில் முகாமிட்டிருக்கும் நாய்கள் தற்போது நடுரோட்டிற்கு வந்து அட்டகாசம் செய்து வருவதாக மக்க்ள குற்றம்சாட்டுகின்றனர். நடுநிசியில் ஓய்வெடுக்கும் நாய்கள் பகல் வேளையில் ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரிவதாகவும், அதனை கண்டு பயந்தவாறு ஒதுங்கி செல்வோரை விரட்டிச் சென்று பதம் பார்த்து வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஆத்தூர் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. கிராமப்புறங்கள் மற்றும் கிளை சாலைகளில் சுற்றித்திரிந்த நாய்கள், தற்போது நெடுஞ்சாலையில் உலா வருவதால் விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.ஆத்தூர் நகரில் உள்ள 33 வார்டு பகுதிகளிலும் அதிகளவில் நாய்களின் நடமாட்டம் உள்ளது. இந்த நாய்களை முறையாக பராமரிக்காமல் தெருக்களில் விடுவதால் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. குறிப்பாக நகரின் முக்கிய தெருக்களிலும், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியிலும் நாய்களால் பல்வேறு தொந்தரவுகள் ஏற்படுகின்றன. நகரின் மையப்பகுதியான ராணிப்பேட்டையில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதால் இருசக்கர வாகனங்களின் சக்கரங்களில் சிக்கி விபத்து அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் சிவக்குமார், பாண்டியன் ஆகியோர் குற்றம்சாட்டுகின்றனர்.

Advertising
Advertising

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஆத்தூர் நகர தெருக்களில் கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றித்திரிவதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி படுகாயம் அடையும் நிலையும் உள்ளது. ஆத்தூர் நகரப்பகுதியில் இருந்து மட்டும் நாய் கடிக்காக நாள் ஒன்றுக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோரிகள் எண்ணிக்கை 2 முதல் 3 வரை இருந்தது. தற்போது, எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினசரி 6 பேரை வரையிலும் நாய் கடிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.  தெருயோரங்களில் செயல்படும் சில்லி சிக்கன் கடைகள் தான் நாய்களின் பெருக்கத்திற்கு முக்கிய காரணமாகும். சிக்கன் சாப்பிடுவோர், அங்கு வரும் நாய்களுக்கு சில துண்டுகளை வீசுவதால் கூட்டம் கூட்டமாக வருகின்றன. இந்த நாய்களை கடைக்காரர் விரட்டியடிப்பதும், அப்போது சாலையில் குறுக்கும் நெடுக்குமாறு செல்வதும் வாடிக்கையாக உள்ளதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, தெருக்களில் சுற்றித்திரியும் நாய் கூட்டத்தை கட்டுப்படுத்திட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயத்தில் அரசு மருத்துவமனையில் போதிய நாய் கடி ஊசியினை தட்டுப்பாடின்றி இருப்பு வைக்கவும் ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். இளம்பிள்ளை: இளம்பிள்ளை பேரூராட்சி பகுதியிலும் நாய் தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், சாலையில் செல்லும் பொதுமக்களும், மாணவ- மாணவிகளும் மிகுந்த அச்சத்துடனேயே உள்ளதாக தெரிவிக்கின்றனர். சாலையில் வாகனத்தில் செல்வோரை நாய்கள் விரட்டிச்சென்று கடித்து குதறுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு நாய்களை பிடித்து பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: