வேலை வாங்கித் தருவதாக ₹20 லட்சம் மோசடி போலி ஐஏஎஸ் அதிகாரியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

சேலம், ஆக.14:  சேலத்தில், வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட போலி ஐஏஎஸ் அதிகாரியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். சேலம் தாரமங்கலம் அருகேயுள்ள கே.ஆர்.தோப்பூரை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் பார்த்திபன். இவர் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை தேடி வந்தார். சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த காந்தி(எ) காந்திகண்ணன்(41) என்பவர், தான் திண்டுக்கல் கலெக்டராக இருப்பதாகவும், சென்னை தலைமை செயலகத்தில் தனக்கு வேண்டப்பட்ட அதிகாரிகள் இருப்பதாகவும் ராஜாவிடம் கூறியுள்ளார். மேலும் மகனுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ராஜாவிடம் ₹20 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் வேலை வாங்கி கொடுக்கவில்லை. விசாரணையில், காந்திகண்ணன் மோசடி ஆசாமி என்பது தெரிந்தது.

இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் ராஜா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, போலி ஐஏஎஸ் அதிகாரி காந்தி கண்ணன், அவரது கூட்டாளிகள் கருணாநிதி, ராஜேந்திரன் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், காந்திகண்ணன் மீது தற்போது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. வேலை வாங்கி தருவதாக, இதுபோல ஏராளமானோரிடம் அவர் பணம் பறித்துள்ளது தெரிய வந்துள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் போலியாக பணி நியமன ஆணைகளையும் தயாரித்து வழங்கி உள்ளார். இதையடுத்து அவருடைய வீட்டை சோதனை செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: