தேசிய நெடுஞ்சாலைகளில் லாரிகளில் சரக்கு திருட்டை தடுக்க வேண்டும்

நாமக்கல், ஆக.14: தேசிய நெடுஞ்சாலைகளில், லாரிகளில் நடைபெறும், சரக்கு திருட்டை தடுக்க வேண்டும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேள பொதுக்குழுவில் வலியுறுத்தபட்டுள்ளது.
நாமக்கல்லில், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதற்கு சம்மேளன தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். செயலாளர் வாங்கிலி, பொருளாளர் தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், நாமக்கல் எம்பி சின்ராஜ், பாஸ்கர் எம்எல்ஏ  ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கனரக வாகனங்களுக்கான தகுதிச்சான்று, 8 ஆண்டுக்கு உள்பட்ட வாகனங்களுக்கு, இரண்டு ஆண்டுக்கு ஒருமுறையும், அதற்கு மேற்பட்ட வாகனங்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறையும் காண்பித்தால் போதுமானது என்ற முறையை, தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும்.தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில், வாகனங்களில் சரக்கு திருட்டு மீண்டும் தலை தூக்கியுள்ளது. இரவு நேரங்களில் ரோந்து படையை அதிகம் ஈடுபடுத்தியும், இரவு நேரங்களில் கொள்ளைக்காக நடக்கும் கொலையையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

வாகன ஓட்டிகளுக்கு, இரவு நேரங்களில் ஓய்வுவெடுக்க  வசதியாக சாலைகளில் உயர்கோபுர மின்விளக்கு வசதியுடன், ஓய்வு பகுதி அமைத்து கொடுக்க வேண்டும். புதிய சேஸ் வாங்கும் போது, தற்காலிக பதிவுசெய்து கொள்ள, ஒரு மாதம் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அதை 3 மாதமாக நீட்டித்து வழங்க வேண்டும்.லாரித்தொழிலை சார்ந்தவர்களுக்கு, தனி நலவாரியம் ஏற்படுத்த வேண்டும். அனைத்து நகரங்களிலும், சரக்கு ஏற்ற, இறக்கச் செல்லும் வாகனங்கள், சாலையோரம் இடையூறின்றி நிறுத்துவதற்கு, லாரி நிறுத்தும் நிலையம் அமைத்து கொடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.விழாவில், ட்ரெய்லர் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சுந்தர்ராஜன், செயலாளர் ராஜேந்திரன், தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் கணபதி, லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரவி, இணைச்செயலாளர் மயில்ஆனந்த், ஆட்டோ நகர் அசோசியேசன் தலைவர் பழனிசாமி, மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மாவட்டத்தில் 1276 மையங்களில் 1.60 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து