மேட்டூரில் தண்ணீர் திறப்பு காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

நாமக்கல், ஆக.14: கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தற்போது, கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ், கபினி அணைகளிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  
இந்த தண்ணீரால் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியை எட்டி உள்ளது. இதை தொடர்ந்து நேற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட்டார். தற்போது 3 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரியில் தண்ணீர் ஆர்பரித்து செல்கிறது.  எனவே காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். கரையோரம், கால்வாய்கள் மற்றும் நீர் நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல் மற்றும் மீன்பிடிக்க கூடாது. மேலும் செல்பி எடுக்கக்கூடாது. குழந்தைகளை நீர்நிலைகளின் அருகே அழைத்து வர வேண்டாம். எனவே பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

மேலும் வெள்ள நீரால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவை இடங்கள் கண்டறியப்பட்டு, மாவட்ட அளவில் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.  எனவே, ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.  மேலும், அவசர கால நடவடிக்கை மையம் எண் 1077, காவல்துறை கட்டுப்பாட்டு எண். 100, தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டு எண். 101, மருத்துவ உதவி கட்டுப்பாட்டு எண். 104, அவசர கால ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு எண். 108 மற்றும் மோகனூர் தாலுகா சப் கலெக்டர் 9445000431,    பரமத்திவேலூர் தாலுகாவிற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் 9445477850 ஆகிய எண்களில் பொதுமக்கள், அவசர கால உதவிக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் ஆசியாமரியம் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பள்ளிபாளையத்தில் குழியில் சிக்கிய அரசு பஸ்