கிருஷ்ணகிரி அணையின் மதகுகள் பராமரிப்பு பணி துவக்கம்

கிருஷ்ணகிரி, ஆக.14:  கிருஷ்ணகிரி அணையின் மதகுகள் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி அணை கட்டப்பட்ட 60 ஆண்டுகளை கடந்துவிட்டதால், கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி அணையின் பிரதான முதல் மதகு உடைந்தது. இதையடுத்து, அதே ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி ₹30 லட்சம் மதிப்பில் 12 அடி உயரத்தில் தற்காலிக மதகு அமைத்து, சீல் வைக்கப்பட்டது. இதனால் அணையின் மொத்த உயரமான 52 அடியில், 42 அடி உயரத்திற்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்க முடியாததால், 8 மதகுகளையும் புதியதாக மாற்ற வேண்டும் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தமிழக அரசு உடைந்த மதகை முற்றிலும் அகற்றி, ₹3 கோடி மதிப்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி புதிய மதகை அமைத்தது. இதையடுத்து, முதல் மதகை போன்றே மற்ற 7 மதகுகளின் பாகங்களிலும் சேதம் ஏற்பட்டிருக்கும் என்பதால், அணையின் பாதுகாப்பு கருதி 52 அடிக்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் போனது. அதன்பின் மற்ற 7 மதகை புதியதாக மாற்றி அமைப்பதற்கான டெண்டர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அந்த 7 மதகையும் மாற்றும் பணி வரும் டிசம்பர் மாதம் துவங்க உள்ள நிலையில், அணையின் வருடாந்திர பராமரிப்பு பணிகள் கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. இதில், மதகுகளை மேலே உயர்த்தும் மோட்டாரை சரிபார்த்தல், துரு பிடித்துள்ள இடங்களை கண்டறிந்து அவற்றை சரி செய்து, பெயிண்ட் அடித்தல், மதகுகளின் பக்கவாட்டில் உள்ள ரப்பர்களை மாற்றுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் தற்போது நடந்து வருகிறது.

Tags :
× RELATED தேய்பிறை அஷ்டமியையொட்டி கிருஷ்ணகிரி காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு