×

சென்னம்மாள் கோயில் தேர்த்திருவிழா கொதிக்கும் எண்ணையில் கைகளால் அதிரசம் சுட்டு அம்மனுக்கு படையல்

போச்சம்பள்ளி, ஆக.14: போச்சம்பள்ளி அடுத்த சென்னம்மாள் கோயில் திருவிழாவில், கொதிக்கும் எண்ணையில் கைகளால் அதிரசம் சுட்டு அம்மனுக்கு படைத்து வழிபாடு நடத்தப்பட்டது. போச்சம்பள்ளி அருகில் உள்ள ஜம்புகுட்டப்பட்டி வண்டிக்காரன் கொட்டாய் கிராமத்தில் உள்ள சென்னம்மாள் கோயிலில் 16ம் ஆண்டு தேர்திருவிழா நடந்து வருகிறது. முதல் நாள் கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், 2ம் நாள் கலச பூஜை, 3ம் நாள் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், 4ம் நாள் காவடியாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், தாரை தப்பட்டை உடன் சென்னம்மாள் சுவாமி தேரில் உலாவரும் நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து, 5ம் நாளாக நேற்று காலை அம்மனுக்கு 48 சங்குகள் வைத்து அபிஷேக பூஜைகள் நடந்தது. இதையடுத்து, கோயில் பூசாரி காளியப்பன் கொதிக்கும் எண்ணையில் அதிரசம் சுட்டு அதை கைகளால் எடுத்து சென்று அம்மனுக்கு படையலிட்டார். அதனை தொடர்ந்து, பெண்களும், ஆண்களும் கொதிக்கும் எண்ணையில் கைவிட்டு அதிரசத்தை எடுத்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் குழந்தை இல்லாத பெண்களுக்கு அதிரசம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இரவு ஓம்சக்தி நாடக குழுவினரின் குறவஞ்சி நாடக நிகழ்ச்சி நடந்தது.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்