×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் நடந்த விபத்துக்களில் 7 பேர் பலி

கிருஷ்ணகிரி, ஆக.14: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் நடந்த, பல்வேறு சாலை விபத்துக்களில் 7 பேர்  உயிரிழந்தனர்.கிருஷ்ணகிரி ராஜா தியேட்டர் அருகே மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் கோவிந்தராஜ். இவரது மனைவி பொற்கொடி(34). இவர் தர்மபுரியில் படிக்கும் தனது மகனை ஹாஸ்டலில் விட்டு விட்டு நேற்று முன்தினம் மாலை தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணகிரி-காவேரிப்பட்டணம் தேசிய நெடுஞ்சாலையில், தென்பெண்ணையாற்றில் கட்டப்பட்டிருக்கும் பாலத்தில் வந்து போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதேபோல், சின்னாறு பகுதியை சேர்ந்த இதயதுல்லா(30), இவர் தனது டூவீலரில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது  எதிரே வந்த லாரியில் மோதியதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். சூளகிரி அடுத்த கோபசந்திரம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன்(47). நல்லகானகொத்தப்பள்ளியை சேர்ந்தவர் ஜெகதீஸ்(30). இருவரும் கோபசந்திரம் பகுதியில் டூவீலர்களில் வந்த போது, எதிரெதிரே மோதி விபத்துக்குள்ளாகினர். இதில், அர்ஜூனன் சம்பவ இடத்திலும், ஜெகதீஸ் மருத்துவமனையிலும் இறந்தனர். ராயக்கோட்டை அடுத்த தொப்புகானப்பள்ளியை சேர்ந்தவர் ரகு(25), இவர் தனது நண்பர் மாரப்பன் என்பவருடன் டூவீலரில் உத்தனப்பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், தலையில் அடிபட்டு ரகு பலத்த காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் மீட்டு ஓசூர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதேபோல், மகராஜகடை அடுத்த சின்னகொத்தூரை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகள் சரண்யா(20). இவர் ஷேர் ஆட்டோவில் சென்றபோது, கந்திகுப்பம் பகுதியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த சரண்யா, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காவேரிப்பட்டணம் சந்தைபாளையம் பகுதியை சேர்ந்தவர் சலாவுதீன்(36). இவர் நேற்று காலை டூவீலரில் கிருஷ்ணகிரி செல்வதற்காக காவேரிப்பட்டணம் அடுத்துள்ள பொதுத்துறை வங்கி அருகே வந்தபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை முந்த முயன்றார். அப்போது, கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் நோக்கி எதிரே வந்த தனியார் பஸ் மீது அவரது டூவீலர் மோதியது. இதில் சலாவுதீன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags :
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்