காரிமங்கலம் அருகே ஓராண்டாக குடிநீரின்றி மக்கள் அவதி

காரிமங்கலம், ஆக.14: காரிமங்கலம் அருகே குட்டூர் கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இருந்தும், ஓகேனக்கல் கூட்டு குடிநீர் ஏற்றி விநியோகிக்காததால், கடந்த ஓராண்டாக பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
காரிமங்கலம் அருகே திண்டல் ஊராட்சி குட்டூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு, ஊராட்சி ஒன்றியம்  சார்பில் குடிநீர், தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு, ஊராட்சி ஒன்றிய நிதியில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டது. இதில் ஒகேனக்கல் கூட்டு குடிநீரை ஏற்றி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஓராண்டாக மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்படுவது இல்லை. பொதுமக்களுக்கு சரிவரி குடிநீர் விநியோகம் செய்வதில்லை.
இதனால் பொதுமக்கள் காலி குடங்களுடன் தண்ணீர் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் விநியோகம் செய்ய கோரி, ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை  மனு கொடுத்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவி–்லை. இதுகுறித்து முன்னாள் திமுக கவுன்சிலர் கோவிந்தசாமி கூறுகையில், இப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கைக்கு பின்னர், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு, ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த ஓராண்டாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை. அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, குடிநீர் வழங்க செய்யாவிடில், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Tags :
× RELATED பேட்டராயசுவாமி கோயில் பூட்டை உடைத்த மர்மநபர்