பெரணமல்லூர் பகுதியில் மணல் கொள்ளையர்கள் அட்டகாசம் போலீசார் இல்லாததால் தொடர்ந்து கைவரிசை

பெரணமல்லூர், ஆக. 14: பெரணமல்லூர் பகுதியில் மணல் கொள்ளையர்கள் தொடர்ந்து மணலை கடத்தி வருகின்றனர். போலீசார் அத்திவரதர் கோயில் பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ளதால் மணல் கொள்ளை படு ஜோராக நடந்து வருகிறது.
பெரணமல்லூர் அடுத்த கெங்காபுரம், கொழப்பலூர், ஆவணியாபுரம், அன்மருதை பகுதி வழியே செய்யாற்றுப்படுகை செல்கிறது. இந்த ஆற்றுப்படுகையொட்டி பல ஏக்கர் பரப்பில் விவசாயம் நடைபெற்று வந்தது. ஆனால் வறட்சி மற்றும் மணல் கொள்ளையர்கள் அட்டகாசத்தால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றதால் குறிப்பிட்ட பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் பற்றாக்குறையும் தலைவிரித்தாடுகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் மணல் கொள்ளையர்கள் கண்டறிந்து அவர்களை கைது செய்தும், ஒரு சிலரை குண்டர் சட்டத்தில் அடைத்தும் மணல் கொள்ளை தடுக்கப்பட்டு வந்தது.

தற்போது, கடந்த சில வாரங்களாக மீண்டும் மணல் கொள்ளை தலை தூக்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக கெங்காபுரம், கொழப்பலூர், அன்மருதை உள்ளிட்ட பகுதிகளில் மணல் கொள்ளை படுஜோராக நடைபெற்று வருகிறது. கெங்காபுரம் பகுதியில் ஒரு சிலர் தங்கள் குடும்பத்துடன் மணல் கொள்ளையில் ஈடுபட்டு சேத்துப்பட்டு பகுதிகளுக்கு அனுப்பி அதிக லாபம் பார்த்து வருகின்றனர்.
அதேபோல், கொழப்பலூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் பகுதியில் செல்லும் ஆற்றுப்படுகையில் குறிப்பிட்ட சில நபர்கள் இரவில் டிராக்டர், மாட்டு வண்டியில் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகவும், அன்மருதை பகுதியில் கொள்ளை போகும் மணல் வந்தவாசி, சேத்துப்பட்டு பகுதிக்கு கடத்தப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இப்பகுதிகளில் நடைபெறும் மணல் கொள்ளையினை மாவட்ட கனிம வளத்துறையினர், வருவாய்த் துறையினர் கண்டுகொள்வதே இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், போலீசார் அத்திவரதர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் இரவு ரோந்து பணியில் போலீசார் ஈடுபடாதது கொள்ளையர்களுக்கு சாதகமாக உள்ளது. பெரணமல்லூர் பகுதியில் செல்லும் ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளையர்களால் மீண்டும் சிதைக்கப்படுவதால், அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

Tags :
× RELATED பணிகளில் ஈடுபடும் 17,500 அரசு ஊழியர்,...