பரோலில் வெளியே வந்துள்ள நிலையில் வேலூர் மத்திய சிறையில் நளினி- முருகன் சந்திப்பு மகள் திருமணம் குறித்து ஆலோசனை

வேலூர், ஆக.14: பரோலில் வெளியே வந்துள்ள நளினி தனது கணவர் முருகனை வேலூர் மத்திய சிறையில் நேற்று காலை சந்தித்து மகளின் திருமண ஏற்பாடு குறித்து பேசினார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் உள்பட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக வேலூர் மத்திய சிறையில் உள்ளனர். முருகனின் மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையில் உள்ளார். இதற்கிடையே, வெளிநாட்டில் வசித்து வரும் நளினியின் மகள் ஹரித்ராவுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக நளினி கடந்த 25ம்தேதி சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி நிபந்தனைகளுடன் பரோலில் வந்தார். தற்போது சத்துவாச்சாரியில் உள்ள நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். இவர் சிறைத்துறை விதிமுறைகளின்படி தினமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

Advertising
Advertising

ஏற்கனவே 15 நாட்களுக்கு ஒருமுறை பெண்கள் சிறையில் இருந்த நளினியை முருகன் சந்தித்து பேசி வந்தார். தற்போது நளினி பரோலில் வெளியே உள்ளதால் கடந்த 25ம் தேதி முதல் இருவருக்கான சந்திப்பு நடக்கவில்லை. இருவரும் சந்தித்து பேச அனுமதி வழங்கும்படி சிறைத்துறை நிர்வாகத்திடம் நளினி அனுமதி கேட்டு இருந்தார். அதன்படி நேற்று காலை 10.30 மணியவில் நளினி சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார். பின்னர் ஆயுதப்படை டிஎஸ்பி மணிமாறன் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நளினியை வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர். அங்கு நளினியும், முருகனும் சந்தித்து பேசினர். மகள் திருமணம் குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அப்போது மணமகன் போட்டோக்களை நளினி, முருகனிடம் காண்பித்து தனது விருப்பத்தை தெரிவிக்குமாறு கூறியுள்ளார். இந்த சந்திப்பு 1 மணி நேரம் நடந்தது. பின்னர் மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் சத்துவாச்சாரியில் உள்ள வீட்டிற்கு நளினி அழைத்துச்செல்லப்பட்டார். இதுவரை முருகன் மட்டுமே நளினியை பெண்கள் சிறையில் சந்தித்த வந்த நிலையில் நேற்று நளினி வேலூர் மத்திய சிறையில் முருகனை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: