ராணிப்பேட்டை சிப்காட்டில் பயங்கரம் விஷவாயு தாக்கி வடமாநில வாலிபர் பலி; 4 பேர் மயக்கம்

ராணிப்பேட்டை, ஆக.14: ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு தாக்கியதில் வடமாநில வாலிபர் ஒருவர் பலியானார். 4 தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதையடுத்து, அங்கு ஆய்வு செய்த அதிகாரிகள் தொழிற்சாலைக்கு `சீல்' வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர். வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை சிப்காட் பகுதி 2ல் தனியார் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு, தற்காலிக தொழிலாளர்களான பீகார் மாநிலத்தை சேர்ந்த பார்கேஷ் மகன் சத்யேந்திர பையா(27), சிப்காட் திருவள்ளுவர் நகரை சேர்ந்த ராமன்(38), வாணாபாடியை சேர்ந்த மாரிமுத்து(40), ராணிப்பேட்டை அடுத்த சத்திரம் புதூரை சேர்ந்த உதயகுமார்(48), பூட்டுத்தாக்கு பகுதியை சேர்ந்த ராஜா(38) ஆகிய 5 பேர் பணியில் இருந்தனர். இரவு 10.30 மணியளவில் சத்யேந்திர பையா தொழிற்சாலையில் கெமிக்கல் கொதிக்கும் ‘ஸ்டீம்’ என்ற பெரிய அளவிலான டேங்க் அருகே சென்றார். அப்போது, அங்குள்ள பைப்பில் இருந்து திடீரென விஷவாயு கசிந்தது. இதையறியாமல், அருகே சென்ற சத்யேந்திர பையாவை விஷவாயு தாக்கியதில் திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த மற்ற 4 தொழிலாளர்களும் ஓடிவந்து அவரை மீட்க முயன்றனர். ஆனால், விஷவாயு தாக்கியதில் அவர்களும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த பக்கத்து கம்பெனி தொழிலாளர்கள் விரைந்து வந்து, பாதுகாப்புடன் 5 பேரையும் மீட்டு, ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சத்யேந்திர பையா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இதைத்தொடர்ந்து, ராமன் உள்பட 4 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அனைவரும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சேவியர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விஷவாயு தாக்கி பலியான சத்யேந்திர பையாவுக்கு அனிதா(24) என்ற மனைவியும், ஆகாஷ்(10), கஞ்சன்(6), அங்க்கூஸ்(3) என்ற மகன்களும் உள்ளனர்.

சத்யேந்திர பையா சிப்காட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் வேலைக்கு சேர்ந்து 3 மாதமே ஆன நிலையில், விஷவாயு தாக்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், நேற்று ராணிப்பேட்டை சப்-கலெக்டர் இளம்பகவத், வாலாஜா தாசில்தார் பூமா, தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் உதவி இயக்குனர் உமா பாரதி, தடயவியல் அறிவியல் நிபுணர் விஜய், லாலாப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சாந்தி கபிலன், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், சிப்காட் போலீஸ இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு சென்று ஆய்வு செய்தனர்.  பின்னர், தொழிற்சாலையில் கசிவு ஏற்பட்ட கெமிக்கல் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, நேற்று மதியம் 3 மணியளவில் சம்பந்தப்பட்ட தனியார் ரசாயன தொழிற்சாலைக்கு அதிரடியாக `சீல்' வைத்து நடவடிக்கை எடுத்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிப்காட் பகுதியில் தோல் தொழிற்சாலை ஒன்றில் தொட்டி உடைந்து அதிலிருந்து வெளியேறிய கெமிக்கல் கழிவுகளில் சிக்கி 10 தொழிலாளர்கள் இறந்தனர். மேலும், இதுபோன்ற ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து பலர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: