ஆம்பூர் அருகே கிராம மக்கள் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பஸ் வசதி மாவட்ட கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்

ஆம்பூ: ஆம்பூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கிராம மக்கள் சார்பில் பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதனை மாவட்ட கல்வி அலுவலர் லதா தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஈச்சம்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஈச்சம்பட்டு, மூப்பர் காலனி, சின்னப்பள்ளி குப்பம், இலங்கை அகதிகள் முகாம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 135 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நீண்ட தூரத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் உரிய பஸ் வசதியின்றி அவதிப்பட்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்த கிராம மக்கள் ₹2 லட்சம் நிதியுதவி அளித்தனர். பின்னர், பெற்றோர் ஆசிரியர் கழகத்துடன் ஆசிரியர்கள் இணைந்து, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்ல வசதியாக ₹6 லட்சம் மதிப்பிலான ஒரு பஸ்சை வாங்கினர். இந்த பஸ்சை மாவட்ட கல்வி அலுவலர் (வாணியம்பாடி) லதா நேற்று மாலை கொடியசைத்து துவக்கி வைத்தார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள் உட்பட மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED குடியாத்தம் நகராட்சியில் மாடித்தோட்டத்தை கலெக்டர் ஆய்வு