விவசாயிகளுக்கு இயந்திர நடவுக்கான நாற்றாங்கால் தயாரிக்க அறிவுரை வழங்க வேண்டும் விவசாயிகளுக்கு இயந்திர நடவுக்கான நாற்றாங்கால் தயாரிக்க அறிவுரை வழங்க வேண்டும்

அரியலூர், ஆக. 14: திருந்திய நெல் சாகுபடி இயந்திர நடவுக்கான நாற்றாங்கால் தயாரிக்க விவசாயிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டுமென ஆய்வு கூட்டத்தில் வேளாண் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.திருமானூர் வட்டாரம் கீழப்பழுவூர் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் மேட்டூர் அணை பாசனத்துக்காக நேற்று முதல் திறக்கப்பட்டதை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அனைத்து வட்டார வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கும் நடந்தது. அரியலூர் வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணமுர்த்தி பேசியதாவது: வேளாண்மைத்துறை அதிகாரிகள் திறக்கப்படும் நீரை முறையாக பயன்படுத்த வேளாண்மை கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மண்வளம் பாதுகாத்து உயர் மகசூல் பெற பசுந்தாள் உரம் பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். முக்கிய இடுபொருளான விதைகள் குறிப்பாக நீண்டகால ரகங்களான சி.ஆர் 1009, சப்-1,சி.ஆர்1009 ஆகியவை போதிய அளவிலும், மத்தியகால ரகமான கோ.ஆர்.50 போதியளவிலும் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைத்து மானிய விலையில் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

 நுண்ணூட்ட கலவை மற்றும் உயிர் உரங்கள் போன்ற இடுபொருட்களை வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைத்து விநியோகிக்க வேண்டும். யூரியா, டிஏபி, பொட்டாசியம் போன்ற உரங்களை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் கடைகளில் உரிய இருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும். உரிய இடங்களில் நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ள வேண்டும். திருந்திய நெல் சாகுபடி இயந்திர நடவுக்கான நாற்றாங்கால் தயாரிக்க விவசாயிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றார். கூட்டத்தில் அரியலூர் வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை இணை இயக்குனர், அலுவலக வேளாண் அலுவலர்கள் மற்றும் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள், வேளாண்மை அலுவலர்கள் பங்கேற்றனர்.


Tags :
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் சிறப்பு திட்ட முகாம்