குளித்தலையில் புதிதாக கட்டப்பட்டும் பயன்பாட்டுக்கு வராத சமூக நிலை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம்

குளித்தலை, ஆக. 14: குளித்தலையில் புதிதாக கட்டப்பட்டும் பயன்பாட்டுக்கு வராத சமூகநிலை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி பகுதிகளிலும் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டு குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது. அதன்படி கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி மற்றும் அப்ப எக்ஸ் அசோசியேட் இணைந்து சமூகநிலை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் குளித்தலை மணப்பாறை ரயில்வே கேட் அருகில் புறவழி சாலை, நாப்பாளையம் தண்ணீர் டேங்க் அருகில், பெரியார் நகர் ஆகிய மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலைய இயந்திரத்தில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டால் ஒரு லிட்டர் தண்ணீர் பெறலாம். ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டால் 5 லிட்டர் தண்ணீர் பெறலாம். அதற்கு மேல் பெற வேண்டும் என்றால் இதற்கென்று உள்ள நிறுவனத்தில் குறிப்பிட்ட தொகையை செலுத்தி ஏடிஎம் கார்டு போன்று பெற்றுக்கொண்டு ஏழு ரூபாய்க்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பெறலாம் என அறிவிக்கப்பட்டது.அதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது தயாராக உள்ள சமூகநிலை சுத்திகரிக்கப்பட்ட நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படாமல் உள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


Tags :
× RELATED வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு