மாநகராட்சி பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

திருப்பூர், ஆக.14: திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் 8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இதில், அடிப்படை வசதி குறைவாக, தூய்மையற்று காணப்படும் பகுதிகளில் கொசுக்கள் பரவாமல் இருக்க, நோய் தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து தெளிக்கும் பணி துவங்கியுள்ளது. ஒரு சுகாதார ஆய்வாளர், மூன்று துப்புரவு பணியாளர்கள் தலைமையிலான குழு, இரண்டு நாளைக்கு ஒரு வார்டு வீதம் ‘அபெட்’ மருந்தை வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகள், பாத்திரம் கழுவும் தொட்டிகளில் தெளிக்கின்றனர். இதுதவிர, லாரிகள், டிராக்டர்கள் மூலம் கொசு புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.

 இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து தெளிக்கப்படுகிறது. பொதுமக்கள், மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். குப்பை மற்றும் கழிவுகளை ரோட்டில் கொட்டக்கூடாது. தொட்டிகளில் போட்டு, கொசு வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து தெளிக்கப்படும்,’’என்றனர்.

Related Stories: