சம்பா பாசன சாகுபடிக்கு 12 டன் நெல் விதைகள்

வெள்ளக்கோவில், ஆக. 14:  வெள்ளகோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ‘‘பவானிசாகர் அணையில் இருந்து முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம், வேலம்பாளையம், பூமாண்டன்வலசு, மேட்டுப்பாளையம், வள்ளியரச்சல், ராசாத்தாவலசு வருவாய் கிராம கீழ்பவானி பாசன  பகுதிகளுக்கு இந்த ஆண்டுக்கான நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு 16ம் தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது.  இந்த தண்ணீரை பயன்படுத்தி இப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நஞ்சை சம்பா நெல் சாகுபடி பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இப்பகுதி கீழ்பவானி பாசன விவசாயிகள் நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள் வெள்ளக்கோவில் வட்டார வேளாண்மைத்துறை மூலம் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. இதற்காக முத்தூர் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் சான்று மற்றும் ஆதார இனத்தை சேர்ந்த ஐஆர்.,20, கோ-50, கோ-51 ஆகிய  ரக நெல் விதைகள் மொத்தம் 12 டன் தயாராக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே இப்பகுதி கீழ்பவானி பாசன விவசாயிகள் இந்த நெல் விதைகள் மற்றும் இடுபொருட்களை மானிய விலையில் பெற்று நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்து கூடுதல் மகசூல் பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: