கோவை கலெக்டர் அலுவலக புதிய கட்டிடத்தில் விரிசல்

கோவை, ஆக.14: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் 4 தளங்களுடன், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு இந்த கட்டடம் திறக்கப்பட்டது. இந்த கட்டடத்தில் ஊராட்சி, பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை, நில அளவை, பிற்பட்டோர் நலத்துறை, மாவட்ட வழங்கல் அலுவலகம் உட்பட 30க்கும் மேற்பட்ட அலுவலக பிரிவுகள் செயல்படுகிறது. மக்கள் குறை தீர்ப்பு கூட்டமும் இந்த அலுவலக வளாகத்திற்குள் நடப்பது வழக்கம். கட்டிடத்தின் வெளிப்புற சுவர் பகுதியில் கடந்த சில மாதம் முன் விரிசல் ஏற்பட்டிருந்தது. தற்போது பெய்த மழையை தொடர்ந்து கட்டடத்தின் உட்பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முதல் தளத்தில் கலெக்டர் அலுவலகத்தின் வீடியோ கான்பரன்ஸ் பிரிவு, தேசிய தகவல் மையம், குறை தீர்ப்பு முகாம் கூடம் போன்றவை விரிசல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பிரிவு அலுவலகத்திலும் விரிசல் அதிகரித்துள்ளது. கட்டிடம் கட்டி 2 ஆண்டிற்குள் விரிசல் விட்டு அபாய நிலையில் இருப்பதால் அதிகாரிகள், அலுவலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது தொடர்பாக அரசு ஊழியர்கள் கூறுகையில், ‘‘ புதிய கட்டிடத்தின் அருகே 120 ஆண்டு பழமையான கருவூல கட்டடம் மற்றும் பதிவாளர் அலுவலக கட்டடம் சிறு விரிசல் கூட இல்லாமல் கம்பீரமாக காட்சி தருகிறது. ஆனால் புதிய கட்டிடம் விரிசல் விட்டு அபாயகரமாக மாறி விட்டது. இந்த அலுவலக பிரிவுகளில் பணியாற்றுபவர்கள் விரிசல் இருப்பதால் புதிய அலுவலக கட்டடத்திற்கு வர மறுத்து விட்டார்கள். கட்டடம் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளது. பொதுப்பணித்துறையினரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறோம், ’’ என்றனர்.


Tags :
× RELATED ட்டேரியில் கழிப்பிடம் கட்ட கோரிக்கை