உபகரணம் தரம் இல்லாததை கண்டித்து கால்நடை பராமரிப்பு அலுவலகம் முற்றுகை

ஈரோடு,ஆக.14: ஈரோடு மாவட்டத்தில் மண்ணில்லா விவசாய திட்டத்தில் வழங்கப்பட்ட  உபகரணத்தில் தரம் இல்லை என கூறி கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநர்  அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில்  மண் (நிலம்) இல்லா விவசாயிகள் தங்களின் கால்நடைகளுக்கு குறைந்த தண்ணீர்  மற்றும் விதைகளை கொண்டு பசுந்தீவனம் தயாரித்து வழங்கும் வகையில் ஹைட்ரோ  போனிக்ஸ் உபகரணம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த உபகரணத்தில் ஒரு எச்பி  மோட்டார், சொட்டு நீர் பாசன குழாய் அமைப்பு, தகர அடுக்குகள், 100 லிட்டர்  தண்ணீர் டேங்க் ஆகியவையுடன் அமைக்கப்பட்டுள்ளன. இவை விவசாயிகளுக்கு  கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மாநில அரசின் 75 சதவீத மானியத்தில்  வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஏராளமான  விவசாயிகள் விண்ணப்பித்து,ஹைட்ரோ போனிக்ஸ் உபகரணத்தை வாங்கி சென்றனர். இந்நிலையில்,  ஈரோடு ஸ்டேட் பாங்க் ரோட்டில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை  இயக்குநர் அலுவலகத்தில் நேற்று ஹைட்ரோ போனிக்ஸ் உபகரணத்தை வாங்க  விண்ணப்பித்திருந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்தனர்.அப்போது,  அவர்களுக்கு வழங்கப்பட்ட ஹைட்ரோ போனிக்ஸ் உபகரணம் தரம் குறைவாக இருந்தது.  இதையடுத்து விவசாயிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:நாங்கள்  கோபி தாலுகாவை சேர்ந்தவர்கள். எங்களது பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு  முன்பு ஹைட்ரோ போனிக்ஸ் உபகரணத்தை டெமோ செய்து காட்டி விளக்கம் அளித்தனர்.  அதன் விலை ரூ.22,500. இதற்கு 75சதவீதம் மானியம். மீதமுள்ள 25 சதவீதத்தை  அதாவது ரூ.5,625யை வரைவோலையாக விண்ணப்பித்தால் போதும் என்றனர்.

இதை  நம்பி நாங்களும் விண்ணப்பித்தோம். நேற்று ஹைட்ரோ போக்ஸ் கருவியை பெற  ஈரோடு வருமாறு அழைப்பு விடுத்தனர். அதன்பேரில் நாங்கள் இங்கு வந்து  பார்த்தால் எங்களிடம் டெமோ காட்டிய உபகரணத்திற்கும், இந்த கருவிக்கும்  மாறுபாடு உள்ளது. மேலும், இந்த கருவி தரம் குறைவானதாக உள்ளது. இது  முழுக்கமுழுக்க தண்ணீர் மூலம் பயன்படுத்தப்படும் உபகரணம். இந்த கருவியில்  மின் கசிவு ஏற்படும் வகையில் மின் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது.எங்களை  அதிகாரிகள் ஏமாற்றி விட்டனர். இந்த உபகரணம் வேண்டாம் என கூறி, நாங்கள்  கொடுத்த வரைவோலையை திரும்ப கேட்டோம். இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்ட  கால்நடை தீவன அபிவிருத்தி உதவி இயக்குநர் சண்முகம், விவசாயிகளிடம்  பேச்சு நடத்த வந்தார். அப்போது விவசாயிகள், அவரை முற்றுகையிட்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து  தீவன அபிவிருத்தி உதவி இயக்குநர் சண்முகம் நிருபர்களிடம்  கூறுகையில்,`நாங்கள் டெமோ காண்பித்தது, 52 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஹைட்ரோ  போனிக்ஸ் கருவி. யாரோ தவறாக கூறி விட்டனர். விவசாயிகளுக்கு கருவி  பிடிக்கவில்லை என்றால் வரைவோலை (டிடி) திரும்ப தரப்படும்’ என்றார்.

Related Stories: