கீழ்பவானி வாய்க்காலில் விநாயகர் சிலை கரைக்க தடை விதிக்க வேண்டும்

ஈரோடு, ஆக.14:  கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. சங்க தலைவர் நல்லசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் சங்க தலைவர் நல்லசாமி நிருபர்களிடம் கூறியதாவது:பவானிசாகர் அணையில் இருந்து பழைய பாசனங்களுக்கு கடந்த 11ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், கீழ்பவானி பாசனத்திற்கு 16ம் தேதி தான் தண்ணீர் திறக்கப்படும் என அறிவித்துள்ளனர். இது அரசாணைக்கு எதிராகவும், காவிரி தீர்ப்பிற்கு எதிராகவும் உள்ளது. பவானிசாகர் அணையின் நீர்நிர்வாகத்தில் கடந்த 60 ஆண்டுக்கு மேலாக அரசு ஆணையோ, விதிமுறையோ, காவிரி தீர்ப்போ பின்பற்றாமல் இருந்து வருகிறது. காவிரி தீர்ப்பின்படி பழைய பவானி பாசனங்களுக்கு ஆண்டுக்கு 8.13 டி.எம்.சி. ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், 16 டி.எம்.சி.யாக நிர்ணயம் செய்துள்ளனர்.

Advertising
Advertising

கீழ்பவானி பாசனத்திற்கு 27.95  டி.எம்.சி. ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், 23 டி.எம்.சி.யாக நிர்ணயித்துள்ளனர். கீழ்பவானி வாய்க்காலில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஒரு பாசனத்திற்கு மட்டும் முன்கூட்டியே தண்ணீர் திறப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். விநாயகர் சதூர்த்தி விழாவின்போது சிலைகளை கீழ்பவானி வாய்க்காலில் கரைக்கின்றனர். இதனால், சிலைகள் மதகுகளை அடைத்து தண்ணீர் முறையாக செல்ல முடியாத நிலை உள்ளது. நடப்பாண்டில் கீழ்பவானி வாய்க்காலில் விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும். அதற்கு மாற்றாக, நொய்யல் ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு நல்லசாமி கூறினார். கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வெங்கடாசலம், ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம், மக்கள் மன்ற அமைப்பாளர் செல்லப்பன், சுப்பிரமணியம் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: