சுதந்திர தினவிழா கலைநிகழ்ச்சிகளில் அரசு பள்ளிகள் புறக்கணிப்பு

ஈரோடு, ஆக.14:  ஈரோட்டில் நாளை நடக்கும் சுதந்திர தினவிழாவில் கலை நிகழ்ச்சி நடத்த அரசு பள்ளிகளை மாவட்ட நிர்வாகம் புறக்கணித்துள்ளது மாணவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  நாடு முழுவதும் சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது. ஈரோடு வ.உ.சி.பூங்காவில் காலை 8.35 மணியளவில் கலெக்டர் கதிரவன் கொடியேற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில், ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொள்வது வழக்கம். ஆனால், இந்தாண்டு நடக்கும் கலை நிகழ்ச்சியில் ஈரோட்டை சேர்ந்த 6 தனியார்   பள்ளிகளை சேர்ந்த 865 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு நடனமாட உள்ளனர். இதேபோல், தனியார் பள்ளியை சேர்ந்த 50 மாணவர்கள் பேண்டு வாத்தியம் இசைக்க உள்ளனர்.  கலைநிகழ்ச்சி–்க்கான ஒத்திகை நிகழ்ச்சி நேற்று ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்தில் நடந்தது. இதை ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் பார்வையிட்டார். வழக்கமாக, மாவட்ட நிர்வாகம் சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழா போன்ற விழாக்களின் போது அரசு பள்ளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து கலை நிகழ்ச்சி நடத்த ஊக்குவிப்பார்கள். ஆனால், இந்தாண்டு மாவட்ட நிர்வாகம் அரசு பள்ளியை புறக்கணித்துள்ளது.  

இதனால், அரசு பள்ளி மாணவ, மாணவியர் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக, ஈரோட்டில் அரசு இசைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற விழாக்களில் அரசு இசைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் இசை நிகழ்ச்சி இடம் பெறும்.

நாளை நடக்கும் விழாவில் அரசு இசைப்பயிற்சி பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்கவில்லை. இந்தாண்டு அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதிலேயே மாவட்ட நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை பள்ளி கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் இருந்து வருகிறார். அவர், அரசு பள்ளிகளை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனால், மாவட்ட நிர்வாகமோ அரசு பள்ளிகளை ஊக்குவிக்காமல் தனியார் பள்ளிகள் மீது அதிக ஆர்வம் காட்டி வருவது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: