×

நீலகிரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு நிதி திரட்டும் ஆலங்குடி முதியவர்

புதுக்கோட்டை, ஆக.14: நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ஆலங்குடியை சேர்ந்த சமூக சேவகர் ஒருவர் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை சேர்ந்தவர் 515 கணேசன் (68). சமூக சேவகரான இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர், கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக கட்டணம் வசூலிக்காமல் 6 ஆயிரம் சடலங்களை ஏற்றிச் சென்றுள்ளார்.515 கணேசன் என்றால் தமிழகத்தில் அனைத்து சமூக அமைப்புகளுக்கும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுனாமியால் பாதிக்கப்பட்டோர், கடலூரில் தானே புயலில் பாதிக்கப்பட்டோர், சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் நாகை, புதுகை மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை சேகரித்து எடுத்து சென்று வழங்கியுள்ளார்.

தற்போது, நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக ஒலி பெருக்கியுடன் கூடிய தனது 515 அம்பாஸிடர் காரில் கடைகள், குடியிருப்புகளுக்கு சென்று பணம், பொருள்கள் சேகரித்து வருகிறார். கட்டணம் ஏதும் வாங்காமல் 6000 சடலங்களை தன்னுடைய அம்பாசிடர் காரில் எடுத்துச் சென்று ஈமச்சடங்கு செய்வதற்கும் உதவி வருகிறார்.இவருடைய சேவையைப் பாராட்டி தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் அவருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசிடம் இருந்து தனக்கு எந்தவித உதவியோ விருது கிடைக்கவில்லை என்று கணேசன் வேதனையாக கூறுகிறார். இதுபோன்ற நல்ல எண்ணம் படைத்த சமூக ஆர்வலர்களை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா