×

புதுவையில் டிஐஜி தலைமையில் சுதந்திர தினவிழா இறுதி ஒத்திகை

புதுச்சேரி, ஆக. 14: சுதந்திர தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில எல்லைகளில் வாகன சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது. உப்பளம் மைதானத்தில் டிஐஜி ஈஸ்வர் சிங் தலைமையில் நேற்று இறுதி ஒத்திகை நடந்தது. நாட்டின் 73வது சுதந்திர தினம் நாளை (15ம்தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புதுவையில் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் முதல்வர் நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார். இதையொட்டி புதுச்சேரி முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. விழா நடைபெறும் விளையாட்டு மைதானம் முழுமையாக காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு நேற்று முதல் 24 மணி நேர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் புதிய பஸ் நிலையம், ரயில் நிலையங்களில்  கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு பயணிகளின் உடமைகளை மோப்ப நாய்கள் மூலம் பரிசோதித்தனர். மப்டி உடையிலும் காவலர்கள் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஷ்மீர் சம்பவம் காரணமாக இந்தாண்டு மத்திய உள்துறை உத்தரவுக்கிணங்க மாநிலம் முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டு உள்ளது. கடலோர காவல்படையும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது.மாநில எல்லைகளில் வெளிமாநில வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. ஓட்டல், லாட்ஜ், விடுதிகளை ஆய்வுசெய்து புதிய நபர்கள் குறித்து தகவல்களை உரிமையாளர்களிடம் காவல்துறை கேட்டு வருவதோடு, சந்தேக நபர்கள் பற்றி உடனே தகவல் கொடுக்க அறிவுறுத்தி உள்ளது. மேலும் முக்கிய சந்திப்புகளில் உள்ள சிசிடிவி கேமிராக்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இதனிடையே சுதந்திர தின இறுதி ஒத்திகை டிஐஜி ஈஸ்வர்சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சீனியர் எஸ்பி ராகுல் அல்வால், எஸ்பிக்கள் மாறன், செல்வம், வீர.பாலகிருஷ்ணன், முருகவேல் மற்றும் 500க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த சுதந்திர தினவிழா அணிவகுப்பில் முதன்முதலாக காவல் ரோந்து வாகனம் இடம்பெறுகிறது. இந்த நிலையில் சுதந்திர தினத்திற்காக புதுச்சேரி கவர்னர் மாளிகை, சட்டசபை வளாகம், தலைமை செயலகம், கடற்கரை காந்தி சிலை, கார்கில் போர் வீரர்கள் நினைவிடம் உள்ளிட்ட முக்கிய நினைவு சின்னங்கள் இரவில் மின்விளக்களால் ஜொலிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...