×

புதுச்சேரி உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு நிதி

புதுச்சேரி, ஆக. 14:  புதுச்சேரி முன்னாள் எம்பி பேராசிரியர் ராமதாஸ், 15வது நிதிக்குழுவின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்கள் ஆண்ட காலத்தில் இருந்தே உள்ளாட்சி அமைப்புகள் பெருமைமிகு அங்கங்களாக இருந்தன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்று 116 நகர வார்டுகளை உள்ளடக்கிய 5 நகராட்சிகளும், 108 கிராம பஞ்சாயத்துக்களையும், 812 கிராம வார்டுகளையும் உள்ளடக்கிய 10 கொம்யூன் பஞ்சாயத்துக்களும் உள்ளன. இதில் 1144 மக்களால் தேர்ந்தெடுக்கக் கூடிய பிரதிநிதிகள் செயல்பட வேண்டும். இந்த அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்க வேண்டிய தேர்தல்கள் முறையாக நடத்தப்படாமல் இருந்த போதும், இந்த அமைப்புகள் தங்களிடமுள்ள பணியாளர்களை கொண்டு குறைந்த பணிகளை ஆற்றி வருகின்றன. இந்த அமைப்புகள் அடித்தள மக்களுக்கு பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரங்களை அளிப்பதோடு கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் உள்ள பிரச்னைகளை தீர்ப்பதற்கும், மத்திய, மாநில திட்டங்களை செயல்படுத்துவதிலும் பெரிய பங்காற்ற வேண்டிய நிலையில் உள்ளன.

புதுச்சேரி, இந்திய அரசால் நியமிக்கப்பட்ட நிதிக்குழுவிலோ அல்லது உள்துறை அமைச்சகம் நியமித்துள்ள நிதிக்குழுவிலோ சேர்க்கப்படாமல், தனக்கு வர வேண்டிய நியாயமான நிதியை இழந்து நிற்கிறது. மத்திய அரசு அளிக்கும் வருவாய் பற்றாகுறையும், திட்ட நிதிப்பற்றாகுறையும் சேர்ந்து புதுச்சேரி அரசை முழுவதுமாக செயலிழக்க செய்து, வெளிச்சந்தையில் கடன் வாங்க வைத்து, புதுச்சேரி ஒரு கடனாளியாக மாறி வருகிறது. அதுவே, நோய்வாய்ப்பட்டு இருக்கும்போது, அது எப்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவி செய்து வலுப்படுத்த முடியும்?  மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளும், யூனியன் பிரதேசத்தில் உள்ள அமைப்புகளும் ஒரே பணிகளை ஆற்றக்கூடிய ஒரே விதமான அமைப்புகள் தான். மற்ற மாநிலங்களில் உள்ளது போல் புதுச்சேரியிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்றம் இயங்குகிறது. ஆகையால், மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிஉதவியை பரிந்துரைக்கும் 15வது நிதிக்குழு, யூனியன் பிரதேசத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அந்த நிதியை பரிந்துரைக்க வேண்டும். மத்தியில் யாரோ செய்யும் தவறால் புதுச்சேரிக்கு அநீதி இழைக்கப்படுகிறது. எனவே, இப்பிரச்னையின் உண்மைத்தன்மையை தாங்கள் உணர்ந்து புதுச்சேரி உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் ஒரு சிறப்பு நிதியை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags :
× RELATED கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்