பிரம்மதேசம் போலீசார் அதிரடி ஒரே நாளில் 4 சாராய வியாபாரிகள் கைது

திண்டிவனம், ஆக.  14: பிரம்மதேசம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் சாராய விற்பனை நடைபெறுவதாக பிரம்மதேசம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் உதவி ஆய்வாளர் சசிக்குமார் மற்றும் போலீசார் அனைத்து கிராமங்களிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் சேனலூர் கிராமத்தை சேர்ந்த செல்வம் (35) என்பவர் அப்பகுதியில் தொடர்ந்து சாராயம் விற்று வந்துள்ளார். அவரை பிடித்து விசாரணை செய்ததில் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் முன்னூர் கிராமத்தை சேர்ந்த பாக்யராஜ் (36) என்பவர் ஊருக்கு அருகில் இருந்த சவுக்குத் தோப்பில் சாராயம் விற்று வந்துள்ளார் இவரிடம் 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த ரவி (47) என்பவர் அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் சாராயம் விற்று வந்துள்ளார்.

போலீசாரை கண்டவுடன் ரவி சாராயத்தை விட்டு விட்டு தப்பித்து ஓட முயன்றார். அப்போது அவரை விரட்டி பிடித்த போலீசார் அவரிடம் இருந்த 5 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர். மேலும் 3 பேர் மீதும் உதவி ஆய்வாளர் சசிகுமார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் வெள்ளிமேடு பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட நெய்குப்பி கிராமத்தில் போலீசார் ரோந்து சென்றபோது முனியாண்டி (37) என்பவர் அவரது வீட்டின் முன்பு சாராயம் விற்று வந்துள்ளார் அவரை பிடித்து அவரிடம் இருந்த 5 லிட்டர் எரிசாராயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் வெள்ளிமேடுபேட்டை உதவி ஆய்வாளர் மோகனமுத்து வழக்கு பதிவு செய்து முனியாண்டியை கைது செய்தார்.

Related Stories: