தகன மேடை அமைக்க கோரி சவப்பாடை ஊர்வலம்

பண்ருட்டி, ஆக. 14: பண்ருட்டி அருகே திருத்துறையூர், சின்னப்பேட்டை ஆகிய கிராமங்களுக்கு சுடுகாடு, தகனமேடை, தண்ணீர் வசதி ஆகியவை இல்லாமல் கடந்த 25 ஆண்டிற்கும் மேலாக பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.  இவற்றை சீரமைப்பதற்கு பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் எவ்வித பலனும் ஏற்படவில்லை. இப்பிரச்னைகளை நிறைவேற்றகோரி சிபிஎம், திமுக, தவாக, பாமக உள்ளிட்ட கட்சிகள் சவப்பாடை போராட்டம் மற்றும் சாலை மறியல் நடத்தப் போவதாக அறிவித்தது. இதையடுத்து நேற்று காலை சவப்பாடை எடுத்து வந்து போராட்டம் செய்ய ஒன்றிய செயலாளர் லோகநாதன் தலைமையில் திமுக ஊராட்சி செயலாளர் வெங்கடேசன், வார்டு செயலாளர் சத்தியகுமரன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் காந்தி, சிபிஎம் விதொச மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட குழு கிருஷ்ணன், ஒன்றிய குழு ரங்கநாதன் ஆகியோர் வந்திருந்தனர்.

தகவலறிந்த புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் ரேவதி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் செந்தமிழ்செல்வி, பிடிஓ சக்தி ஆகியோர் வந்து போராட்டத்தை தடுத்து நிறுத்தினர். மாநில குழு மாதவன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிரச்னையை தீர்ப்பதற்கு உறுதிமொழி அளித்தனர். இதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED சேதமடைந்துள்ள சாலையை விரைந்து சீரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தல்