விதை பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

கடலூர், ஆக. 14: கடலூர் விதைச்சான்று உதவி இயக்குநர் உலகம்மை முருகக்கனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டத்தில் நீர் பாசன வசதியுள்ள விவசாயிகள் எதிர்வரும் சம்பா பருவத்தில் நெல் மற்றும் குறுகிய கால பயிர்களான பயறு வகைகள், சிறுதானிய வகைகள் எண்ணெய்வித்து பயிர்களில் விதைப்பண்ணை அமைத்திடலாம். விதை பண்ணைகள் அமைப்பதற்கு கருநிலை மற்றும் ஆதாரநிலை விதைகளை அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள் அல்லது உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் வாங்கி பயன்படுத்தலாம். விதைகள் வாங்கும்போது காலாவதி நாள் பார்த்து வாங்கவேண்டும். விதை பண்ணை பதிவு மேற்கொள்ள இருக்கும் விவசாயி பெயரில் விதை விற்பனை மையத்தில் உரிய ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். விதை மூட்டைகளிலுள்ள சான்றட்டைகளை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

விதை பண்ணை பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள், ரசீது மற்றும் சான்றட்டைகளை    அந்தந்த பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளித்து அவர்கள் மூலமாக விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் விதை பண்ணை பதிவை மேற்கொள்ள வேண்டும்.
பதிவு பெற்ற தனியார் விதை உற்பத்தியாளர்கள் நேரடியாக விதை சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் விதை பண்ணை பதிவு மேற்கொள்ளலாம். விதை பண்ணை பதிவு செய்ய விரும்பும் அரசு மற்றும் தனியார் விதை உற்பத்தியாளர்கள் விதைத்த 35 நாட்கள் அல்லது பூப்பதற்கு 15 நாட்கள் முன்னதாக விதை பண்ணைக்கான ஸ்பெக்ஸ் இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும்.இவ்வாறு பதிவு செய்யப்பட்ட விதை பண்ணைகள் விதைச்சான்று அலுவலரால் பயிரின் பல்வேறு நிலைகளில் வயலாய்வு மேற்கொள்ளப்பட்டு கலப்படமற்ற, இனத்தூய்மை உள்ள தரமான விதைகள் உற்பத்திக்கு வழி செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED சுருக்குமடி வலை பயன்படுத்தினால் நலத்திட்ட உதவிகள் ரத்து