தலைவன்கோட்டை அருகே கொல்லி ஆற்றில் பாலம் கட்டும் பணியால் குடிநீர் குழாய் துண்டிப்பு

நெல்லை, ஆக. 14:  தலைவன்கோட்டை அருகே கொல்லியாற்றில் பாலம் கட்டும் பணிக்காக குழி தோண்டிய போது குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் 3 கிராமங்களில் குடிநீர் கிடைக்காததால் மக்கள் தவிக்கின்றனர். வாசுதேவநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தலைவன்கோட்டையில் கொல்லியாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தலைவன்கோட்டை ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் பூஜைபாண்டியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த செய்தி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து வாசுதேவநல்லூர் எம்எல்ஏ மனோகரன், கொல்லி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தரப்படும் என உறுதியளித்தார்.

தற்போது பாலம் கட்டுமான பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இவ்வாற்றின் குறுக்கே தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் பைப்லைன் செல்கிறது. பாலம் கட்டுமான பணிக்காக தோண்டிய போது குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டது. இதனால் கடந்த 5 நாட்களாக பட்டக்குறிச்சி, அரியூர், பாறைப்பட்டி ஆகிய 3 கிராமங்களில் தண்ணீர் வரத்து தடைபட்டது. இதனால் இந்த கிராமங்களில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி மாற்றுப்பாதையில் குழாய் அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: