நிரம்பி வழியும் கொடுமுடியாறு அணை பாசன குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுமா?

களக்காடு, ஆக. 14:  சாரல் மழையால் நிரம்பி வழியும் திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையில் இருந்து பாசன குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுமா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.  நெல்லை மாவட்டம், களக்காடு அருகே திருக்குறுங்குடி மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் ரூ.40 லட்சத்தில், கடந்த 2004ம் ஆண்டு கொடுமுடியாறு அணை கட்டப்பட்டது. இதன் மொத்த கொள்ளளவு 52.50 அடி. இந்த அணை மூலம் திருக்குறுங்குடி, ஏர்வாடி, வள்ளியூர் வட்டாரத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்புவதோடு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பயனடைகின்றன. அணையில் இருந்து படலையான் கால்வாய், வள்ளியூரான் கால்வாய், நம்பியாறு கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த வாரம் திருக்குறுங்குடி மேற்குத்தொடர்ச்சி மலையிலும், கொடுமுடியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் கனமழை பெய்தது. இதையடுத்து நீர்வரத்து அதிகரிப்பால் கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் மளமளவென உயரத் துவங்கியது. தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் அணையின் நீர்மட்டம் 52.50 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. மேலும் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்துள்ளது.

இதனிடையே தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் இந்த அணையால் தண்ணீர் பெறும் குளங்கள், கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நீரின்றி வறண்டுள்ளன. இதனால் இங்குள்ள விளைநிலங்களில் கார் சாகுபடியும் துவங்கவில்லை. ஒரு சில இடங்களில் மட்டும் கிணற்றுப் பாசனத்தை நம்பி விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். எனவே, தற்போது பெய்துவரும் சாரல் மழையால் கொடுமுடியாறு அணை நிரம்பி வழிவதால் பாசன குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் இருந்து வருகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும் சாகுபடியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: