பக்தர்கள் திரளானோர் தரிசனம் அம்பை, தென்காசி கோயில்களில் ஆடித்தபசு காட்சி

அம்பை, ஆக. 14: அம்பை, தென்காசி கோயில்களில் ஆடித்தபசு திருவிழா விமரிசையாக நடந்தது. தபசிருந்த அம்பாளுக்கு சுவாமி சங்கர நாராயணராகவும், சங்கரலிங்கராகவும் காட்சியளித்தார். இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசித்தனர். அம்பை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள தெற்கு சங்கரன்கோவில் என்றழைக்கப்படும் சங்கரலிங்க சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடந்தது. 10ம் திருநாளன்று கோயில் அருகே ஆற்றில் மா, மஞ்சள் பொடி, புஷ்பம் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. இரவு சுவாமி இடபவாகன வீதிஉலா  நடந்தது. தொடர்ந்து அம்பாள் காளை வாகனத்தில் எழுந்தருளி அம்பை தெற்கு தெரு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வந்திறங்கி தீபாராதனையும் பின்னர் ரதவீதி உலாவையடுத்து அகஸ்தியர் கோயிலை வந்தடைந்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி நேற்று நடந்தது. இதையொட்டி காலை 4.30 மணிக்கு அபிஷேகம், தீபாராதனைக்குப்பின் வெள்ளி சப்பரத்தில் அம்பாள் எழுந்தருளி தபசு மண்டபத்தை வந்தடைந்ததும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 6 மணிக்கு சங்கர நாராயணர் தபசு காட்சி தரிசனமும், 6.30 மணிக்கு சங்கரலிங்க சுவாமி, அம்பாளுக்கு இடபவாகன காட்சி தரிசனமும் நடந்தது.

இரவு 9 மணிக்கு கோமதி அம்பாள், சங்கரலிங்க சுவாமி திருமண காட்சி நடந்தது. இதில் அம்பை, கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று(14ம் தேதி) இரவு 7.30 மணிக்கு சங்கரலிங்க சுவாமி தெப்ப திருவிழாவும், நாளை இரவு 7.30 மணிக்கு அகஸ்தீஸ்வரர் சுவாமி தெப்பத் திருவிழாவும், தொடர்ந்து சுவாமி, அம்பாள் வீதிஉலாவும் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் சபாபதி, ராஜகோபாலன் உள்ளிட்ட நிர்வாக குழுவினரும் செய்திருந்தனர். பாதுகாப்பு பணிகளில் டிஎஸ்பி ஜாகீர்உசேன், இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் தீயணைப்பு துறையினரும் ஈடுபட்டனர்.  

தென்காசி: கீழசங்கரன்கோவில் மற்றும் மேலச்சங்கரன்கோவிலில், ஆடித்தபசு திருவிழா கடந்த 3ம் தேதி துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனை மற்றும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தபசு காட்சி, நேற்று மாலை நடந்தது. காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக மாவிளக்கு, நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். மாலையில் தெற்குமாசி வீதியில் தபசுக்காட்சி கொடுப்பதற்காக சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து அம்பாளுக்கு சுவாமி சங்கர நாரயணராக காட்சி கொடுக்கும் தபசுக்காட்சி நடந்தது. பின்னர் மூன்று முறை சுவாமி அம்பாள் மாலை மாற்றும் வைபவம் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. சிவனடியார்களின் சிவபூத கணவாத்தியங்களும் இசைக்கப்பட்டன.

இதில் கோயில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன், கணக்கர் பாலு, மணியம் செந்தில்குமார், இலஞ்சி அன்னையாபாண்டியன், அதிமுக நகர செயலாளர் சுடலை, மாரிமுத்து, முருகன்ராஜ், சுப்புராஜ், கூட்டுறவு சார்பதிவாளர் லெட்சுமணன், மும்பை முருகேசன், காங்கிரஸ் மாடசாமிஜோதிடர், சுப்பிரமணியன், அமமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், நகர செயலாளர் துப்பாக்கிபாண்டியன், பாஜ நகர தலைவர் திருநாவுக்கரசு, சங்கரசுப்பிரமணியன், கருப்பசாமி, ராஜ்குமார் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் இன்று இரவு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. இதேபோல் கீழ சங்கரன்கோவிலிலும் தபசுக்காட்சி மட்டப்பா தெருவில் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் சங்கர், செயல் அலுவலர் யக்ஞநாராயணன் மற்றும் கட்டளைதாரர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் ஆடிவேல், சரஸ்வதி தலைமையிலான போலீசார் மற்றும் ஊர்க்காவல்படைனர் செய்திருந்தனர்.

Related Stories: