களக்காட்டில் 26 ஆண்டாக பாழடைந்து கிடக்கும் அரசு கட்டிடம்

களக்காடு, ஆக. 14: களக்காடு  திருக்கல்யாணத்தெரு ஆற்றங்கரையில், அரசுக்கு சொந்தமான நிலங்கள்  உள்ளன. இதில் கடந்த 1990ம் ஆண்டு    வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டப்பட்டு  செயல்பட்டு வந்தது. களக்காடு வருவாய் ஆய்வாளர், அந்த அலுவலகத்தில் தனது  பணிகளை கவனித்து வந்தார். பொதுமக்களும் தங்களுக்கு தேவையான  சான்றுகளை பெற்று சென்றனர். இந்நிலையில் கடந்த 1992ம் ஆண்டு ஏற்பட்ட  புயலின் போது மரம் விழுந்ததில் கட்டிடம் பழுதடைந்தது. அதன் பிறகு  கட்டிடம் சீரமைக்கப்படவில்லை. அங்கு செயல்பட்டு வந்த வருவாய்      ஆய்வாளர்  அலுவலகம், வாடகை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த 26 ஆண்டுகளாக அந்த  கட்டிடம் சீரமைக்கப்படாததால்    பராமரிப்பின்றி, பாழடைந்து வருகிறது.  சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. கதவு, ஜன்னல்கள் உடைந்து காணப்படுகிறது. இதனால் கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

பாழடைந்த கட்டிடத்தில் பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகள் தஞ்சமடைந்து உள்ளன.  இவைகள் இரவு நேரங்களில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால்  பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். போஸ்டர்கள் ஒட்டுமிடமாகவும்  கட்டிடம் பயன்பட்டு வருகிறது. தற்போது களக்காட்டில் செயல்பட்டு  வரும் பல்வேறு அரசு அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றன.  மாதந்தோறும் வாடகை என்ற பெயரில் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது.  எனவே பாழடைந்து கிடக்கும் அரசு கட்டிடத்தை புனரமைத்து அதில் ஏதாவது அரசு  அலுவலகத்தை செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: